×

மாமல்லபுரம் பேரூராட்சியில் பைப்லைன் உடைந்து காட்சி பொருளாக காணப்படும் குடிநீர் தொட்டி

மாமல்லபுரம், டிச. 5: மாமல்லபுரம் பேரூராட்சியில், பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய குடிநீர் தொட்டி, பைப்லைன் உடைந்து,  காட்சி பொருளாக காணப்படுகிறது. மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் ஸ்ரீகருக்காத்தம்மன் கோயில் அருகில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவதற்காக ஒரு குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு மன் அமைக்கப்பட்டது.ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கு முன், இந்த தொட்டியில் உள்ள பைப் லைன்கள் உடைந்து, குழாய்கள் காணாமல் போயின. இதனால் பயன்பாடு இல்லாமல், குடிநீர் தொட்டி காட்சி பொருளாக காணப்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் தண்ணீர் கிடைக்காமல் கடும் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் புராதன சின்னங்களை கண்டு ரசித்து விட்டு, தண்ணீர் குடிக்க சென்றால் அதில் குழாய் இல்லாததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவல நிலை உள்ளது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை, புகார் அளித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்ரீகருக்காத்தம்மன் கோயில் அருகே குடிநீர் தொட்டி அமைத்து, மக்களின் பயன்பாட்டில் இருந்தது. அதில் தண்ணீர் பிடித்து, அங்குள்ள பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பயன்படுத்தினர். கடந்த மாதம், குடிநீர் தொட்டியில் உள்ள பைப் லைன்கள் உடைந்தது. அதில் இருந்த குழாய்களும் காணாமல் போனது. இதனை சரி செய்ய வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் இருக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து, பைப்லைன் மற்றும் குழாய்கள் பொறுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.


Tags : pipeline collapse ,
× RELATED இடியும் நிலையில் மேல்நிலை குடிநீர்...