×

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையிலும் நிரம்பாத ஏரிகள்

செங்கல்பட்டு, டிச.5: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துள்ளது. அதில், ஒரு சில ஏரிகளில் தண்ணீர் நிரம்பாததால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், செங்கல்பட்டு, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. மழைநீர் கால்வாய்களில் அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு காரணத்தால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரிகள், ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பின. விவசாயத்துக்கு நீர் ஆதாரமாக விளங்கும் மிகப்பெரிய ஏரிகளில் கனமழை பெய்தும், தண்ணீர் நிரம்பவில்லை. இதனால், விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.மாவட்டத்தின் 6வது பெரிய ஏரியான பொன்விளைந்த களத்தூர் ஏரியின், முழு கொள்ளளவு 15 அடி. தற்போது, பெய்த மழையில், 12அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. செங்கல்பட்டு நீஞ்சள் மடு அணையில் இருந்து களத்தூரான் கால்வாய் மூலம் பொன்விளைந்த களத்தூர் ஏரிக்கு மழைநீர் செல்லாததால், ஏரி முழுமையாக நிரம்பவில்லை. இதற்கு காரணம் நீஞ்சள் மடு அணையில் நிரம்பிய மழைநீரை, ஏரிக்கு அனுப்பாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீணாக ஆற்றில் திறந்து விட்டனர்.

இந்த மழைநீர், பாலாற்றில் கலந்து கடலுக்கு சென்று வீணானது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு தாலுகாவில் உள்ள பாலூர் பெரிய ஏரியின் முழு கொள்ளளவு 15.30 அடி. ஆனால், தற்போது பெய்த கனமழையில், வெறும் 3.50 அடி தண்ணீர் மட்டுமே நிரம்பியுள்ளது. வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், ஏரியில் அதிகளவில் மணல் எடுக்கப்பட்டதால் ஏரிக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக வந்துள்ளது. அதிக மழை பெய்தும் ஏரியில் நீர் இருப்பு இல்லாததால் பாலூர், கரும்பாக்கம் உள்பட 10 கிராம விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். செங்கல்பட்டு கொளவாய் ஏரியின் முழு கொள்ளளவு 15 அடியில், தற்போது 10.60 அடி மட்டும் நிரம்பியுள்ளது. 15.70 அடி கொள்ளளவு கொண்ட செய்யூர் பெரிய ஏரி, தற்போது 7.20 அடி மட்டுமே நிரம்பியுள்ளது.
இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவு செய்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் குடிமராமத்து பணி மேற்கொண்டது. ஆனாலும், போதுமான மழை பெய்தும் ஏரிக்கு நீர்வரத்து இல்லை.இதனால், மழை பெய்தும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. மக்களின் வரி பணம் மட்டும் வீணானது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Tags : lakes ,district ,Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 கிலோ...