×

மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் கிளியாறு கரையோர கிராம மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை

மதுராந்தகம், டிச. 5: மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதால்,  ஏரியின் நீர் பிடிப்பு மற்றும் உபரிநீர் வெளியேறும் கிளியாறு கரை ஓரங்களில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி, 23.3 அடி உயரம் கொண்டது. சுமார் 2,400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.
 கடந்த சில நாட்களாக பெய்த மழையால், இந்த ஏரியின் நீர்மட்டம் விரைந்து நிரம்பியுள்ளது. இதையொட்டி, 23 அடியை தொட்டுவிட்டது. இதனால், விரைவில் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி, உபரிநீர் திறந்துவிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதையொட்டி, உபரிநீர் செல்லும் கிளியாற்றின் இரு கரைகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, அவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தண்டோரா மூலம் அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

கிளியாற்றங்கரையில் மலைப்பாளையம், கருங்குழி, தோட்ட நாவல், மேட்டு காலனி, கெனார், இருசமநல்லூர், கேகே புதூர், பாத்திமா நகர், ஓசூர் ஆகிய கிராமங்கள் இடது கரையிலும், கத்திரிச்சேரி, விழுந்தமங்கலம், முன்னுத்திகுப்பம், வளர்ப்பிறை, முருகன்சேரி, வீராணகுண்ணம், குன்னத்தூர், தச்சூர், நீலமங்கலம் ஆகியவை வலது கரையிலும் உள்ளன. மேலும், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் காணப்படும் அனுமந்தபுரம், புதுப்பட்டு, பசும்பூர், புதுச்சேரி ஆகிய கிராமங்களில் நேற்று காலை முதலே மதுராந்தகம் ஆர்டிஓ லட்சுமிபிரியா, வட்டாட்சியர் வேல்முருகன், துணை வட்டாட்சியர் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் கோபி, பொதுப்பணித் துறை பொறியாளர் குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டனர்.அப்போது, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் இருப்பதற்கான வழிவகைகளை கூறினர். குறிப்பாக மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரிநீர் கிளியாற்றில் திறக்கப்பட்டால், அங்குள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். சிறுவர்களை வெள்ளநீரில் குளிக்க அனுமதிக்கக் கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் தண்டோரா எச்சரிக்கை மூலம் வெளியிடப்பட்டன.

.

Tags : residents ,village ,Kiliyaru ,
× RELATED அனைத்து அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து