×

உத்திரமேரூர் அருகே பரபரப்பு கால்வாய் அமைப்பதை எதிர்த்து வாலிபர் தீக்குளிக்க முயற்சி

உத்திரமேரூர், டிச.5: உத்திரமேரூர் அடுத்த புத்தளி கிராமத்தில் ஈஸ்வரன் கோயில் தெரு உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த தெருவின் இருபுறமும் முறையான மழைநீர் கால்வாய் வசதி அமைக்கவில்லை. இதனால் மழைக் காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி, அதில் கழிவுநீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசும். இதனால், அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் தெருக்களில் மழைநீர் தேங்கி, குளம்போல் காட்சியளிக்கிறது. மேலும் அப்பகுதி கழிவுநீருடன் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகியுள்ளது. இதனால் இந்த தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி அரசு அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நேற்று காலை அதிகாரிகள், மேற்கண்ட பகுதிக்கு சென்றனர். அந்த இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள், தற்காலிகமாக சாலையோரம் கால்வாய் அமைத்து, மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். /அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சதாசிவம் என்பவர், அவரது வீட்டின் அருகே கால்வாயை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென அவர், தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து, உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி சமரசம் பேசினர். பின்னர், கால்வாய் அமைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

n பெரும்புதூர்: பெரும்புதூர் அடுத்த சோமங்கலம் அருகே பழந்தண்டலம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்தி (17). தர்காஸ் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் தனது நண்பர்கள் சோமங்கலம் சஞ்சய் (18), ஜெயப்பிரகாஷ் (17), பழந்தண்டலம் ஹரி (17), நடுவீரப்பட்டு ரிஸ்வான் (17), சித்திக் (17), முகம்மது பயஸ் (16), மேட்டூர் ராஜ்குமார் (18), காந்தி நகர் முகமதுஆஷிர் (17) ஆகியோருடன் சோமங்கலம் ஏரிக்கு சென்றார். அங்கு, 9 பேரும் மீன்பிடி படகில் ஏறி, ஏரியை சுற்றி பார்த்தனர். அப்போது படகை திருப்பும்போது கார்த்தி, சஞ்சய் ஆகியோர் ஏரியில் விழுந்தனர். நீந்தி வந்த சஞ்சயையும், படகில் இருந்த 7 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டனர். ஆனால், ஏரியில் மூழ்கிய கார்த்தியை மீட்க முடியவில்லை. தகவலறிந்ததும் தாம்பரம், இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து, கடந்த 3 நாட்களாக தேடி, ஏரியில் மூழ்கிய கார்த்தியை நேற்று காலை சடலமாக மீட்டனர். சோமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

n உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி எம்ஜிஆர் நகர் அருகே மாதிரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில், வளாகத்தில் மிகவும் பழமையான ஆலமரம் இருந்தது. இந்த ஆலமரத்தின் விழுதுகள் மரத்தினைச் சுற்றி ஆங்காங்கே பூமியில் ஊன்றி வளர்ந்து வருகிறது. இதில் ஒரு விழுது மட்டும் சுமார் 40 அடி உயரம் வரை ஒரே நேர்கோட்டில் வளர்ந்து காணப்பட்டது. கோயிலோடு சேர்த்து இம்மரத்தையும் அப்பகுதி மக்கள் வழிபடுகின்னறனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சிலர், கோயில் வளாகத்தில் உள்ள ஆலமரத்தின் விழுதினை பொக்லைன் இயந்திரம் மூலம் வேரோடு பெயர்த்து எடுத்து டிராக்டரில் கடத்த முயன்றனர். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள், அப்பகுதியில் திரண்டு, டிராக்டரை மடக்கி பிடித்தனர். பொதுமக்களை கண்டதும், மரத்தை கடத்த முயன்ற மர்மநபர்கள், தப்பிவிட்டனர். இதையடுத்து டிராக்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, மரத்தை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கைது செய்வோம் என உறுதியளித்தனர்.  இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Plaintiff ,Canal ,Parabharan ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்