×

மாநகர பஸ் மோதிய விபத்தில் காயமடைந்தவருக்கு ₹26 லட்சம் இழப்பீடு

சென்னை, டிச. 5: மாநகர பஸ் கையில் ஏறி இறங்கியதில் காயமடைந்தவருக்கு ₹26.85 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கொளத்தூரை சேர்ந்தவர் எஸ்.குருபிரசாத். இவர் கடந்த 2013 செப்டம்பர் அன்று கோயம்பேடு அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் பைக்குடன் சறுக்கி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த மாநகர அரசு பேருந்து அவரது கை மீது ஏறி, இறங்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் சிக்கிசைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி, மாநகர போக்குவரத்து கழகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சாந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கவனக்குறைவாகவும், வேகமாகவும் வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது. அவர் பஸ்சை முந்தி செல்ல முயன்றதால் தான் விபத்து ஏற்பட்டது என மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி, ‘‘பஸ் டிரைவர் மீது 80 சதவீதம் கவனக்குறைவும், மனுதாரர் மீது 20 சதவீதம் கவனக்குறைவும் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே மனுதாரருக்கு இழப்பீடாக ₹26.85 லட்சம் மாநகர போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : bus accident ,
× RELATED மழை நீரில் மூழ்கி மீண்டும் முளைத்த...