×

தூத்துக்குடி மாவட்டத்தில் 50 ஏக்கர் பரப்பில் காடுகள் அமைக்கும் திட்டம் விளாத்திகுளத்தில் கலெக்டர் தகவல்

விளாத்திகுளம், டிச. 5:  தூத்துக்குடி  மாவட்டத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். விளாத்திகுளத்தில் சாரோன் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் மரக்கன்று வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் விதைப்பந்துகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி நிர்வாகி டாக்டர் வெல்விஷர் தலைமை வகித்தார். பள்ளித்  தாளாளர் நளினி வெல்விஷா், பள்ளி முதல்வர் சம்பத், விளாத்திகுளம் தாசில்தார்  ராஜ்குமார், பிடிஓ தங்கவேல்,செயல் அலுவலர் தனசிங், இன்ஸ்பெக்டர் பத்மநாபன்  பிள்ளை முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கலெக்டர்  சந்தீப் நந்தூரி  பேசுகையில், ‘‘பருவநிலை  மாறுபாடு ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் மரம் வளர்ப்பு என்பது மிக முக்கியமான  இடத்தில் உள்ளது தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த 2015-2016  காலகட்டத்தில் மழை மிக குறைவாகவே காணப்பட்டது. 2017-18ம் ஆண்டு காலங்களில் மிதமான  மழை இருந்தது.இந்த கால கட்டத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்ட  நிலையில் இருந்தது.ஆனால் இந்த ஆண்டு அதிகமான மழைப் பொழிவின் காரணமாக  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 90 சதவீதத்திற்கும் மேலான கண்மாய்  குளங்கள் ஏரிகள் நிரம்பி உள்ளது.

பல்வேறு நாடுகளில் பருவநிலை  மாற்றத்தின் காரணமாக அதிக வெப்பம் மற்றும் அதிக மழை பொழிவின் காரணமாக   பாதிக்கப்பட்டுள்ளது.இது போன்ற பருவநிலை மாற்றத்திற்கு  காடுகள் பல்வேறு  காரணங்களுக்காக வெட்டப்படுதனால் ஏற்படுகிறது. காடு வளர்ப்பதன்  முக்கியத்துவத்தை மாணவப் பருவத்தில் இருந்தே அறிந்து கொள்வதன் மூலம்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மூலம் பசுமை பரவுவதற்கு  நடவடிக்கை எடுக்க முடியும்.ஒவ்வொரு மாணவர்களும் தங்களது வீட்டில்  முடிந்தவரை ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டும். தூத்துக்குடி  மாவட்டத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் காடுகள் அமைப்பதற்கு திட்டம்  தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை  எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசுவின் அளவு  குறைக்கப்பட்டு வருகிறது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதுபோன்ற  மரக்கன்றுகள் நட்டுதல் மற்றும் விதைப்பந்துகள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் பசுமையை ஏற்படுத்த வேண்டும்’’  என்றார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு விதைப்பந்துகளை வழங்கி மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணியைத் துவக்கிவைத்தார். பள்ளி வளாகத்தில் துவங்கிய இப்பேரணி  மதுரை சாலை, காய்கறி மார்க்கெட், வேம்பார்  சாலை மற்றும் எட்டயபுரம் சாலை  உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று  விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் நிறைவடைந்தது. பேரணியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு, வளர்ப்பதின் முக்கியத்துவம் குறித்து கோஷமிட்டமாறு இதுகுறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி அணிவகுத்து சென்றனர்.
ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சம்பந் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags : Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி மாவட்ட குத்துசண்டை போட்டி