ஆறுமுகநேரி சவேரியார் ஆலய திருவிழாவில் கப்பல் பவனி கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு

ஆறுமுகநேரி, டிச. 5: ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலய திருவிழாவில் 10ம் நாளையொட்டி கப்பல் பவனி நடந்தது. இதில் கிறிஸ்தவ மக்கள் திரளாகப் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆலய திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலை மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் நடந்தது.  2ம் தேதி மாலை  திருவிழா மாலை ஆராதனை நடந்தது.  இதை கொம்புத்துறை பங்குத்தந்தை சகாயம்  ஜோசப் அடிகளார் நடத்தினார். நேற்று முன்தினம் (3ம் தேதி) காலை 7 மணிக்கு ஆடம்பர  கூட்டுத்திருப்பலி நடந்தது.  இதை சென்னை கப்பூசின் சபையைச் சேர்ந்த சூசை  ராஜா தலைமையில் தூத்துக்குடி மில்லர்புரம் நற்செய்தி நடுவம் இயக்குநர்  ஸ்டார்வின் அடிகளார் மற்றும் ஆறுமுகநேரி பங்குத்தந்தை அலாய்சியஸ் அடிகளார் முன்னின்று நடத்தினர். இதில் 21 சிறுவர்களுக்கு புதுநன்மை வழங்குதல்  நிகழ்ச்சியும், உறுதிப்பூசுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

இரவு புனித  சவேரியார் சொரூபம் தாங்கிய கப்பல் தூய சவேரியார் ஆலயத்தில் இருந்து  புறப்பட்டது.  அப்போது பலர் தங்கள் குழந்தைகளை சவேரியாருக்கு தானமாக  அளித்து பணம் கொடுத்து பெற்றுக்கொண்டனர். மேலும் உப்பு, மிளகு காணிக்கையாக  செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் பவணி முக்கிய  வீதிவழியாக மேல சண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயம் வந்தடைந்தது. இதில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திரளாகப் பங்கேற்றடனர்.   ஏற்பாடுகளை ஊர்க் குழுத்தலைவர் அமிர்தம் மற்றும் திருவிழா கமிட்டியினர்  செய்திருந்தனர்.

Related Stories: