×

நாசரேத் வட்டாரத்தில் மழை பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

நாசரேத், டிச. 5: நாசரேத் வட்டாரத்தில் உள்ள கடம்பாகுளம், வெள்ளமடம் பெரியகுளம், நொச்சிகுளம், பிள்ளையன்மனை குளம், முதலைமொழி குளம், புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள், தொடர்ந்து பெய்த மழையால் நிரம்பத் துவங்கின. இதில் நிரம்பி வழிந்த வெள்ளமடம் பெரியகுளத்தில் பாதுகாப்பு கருதி அதில் உள்ள 10 மடைகளில் 9 மடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து சீறிப்பாயும் வெள்ளத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் குளியலிடுகின்றனர். எஞ்சிய ஒரு மடை சேதமடைந்த நிலையில் உள்ளதால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது. இதனிடையே கடம்பாகுளம் உடைந்து நாசரேத் அருகே வெள்ளரிக்காயூரணி- வளவன் நகரில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மணல் மூடைகளை கொண்டு சீரமைத்தனர். இதனிடையே வெள்ளத்தால் பெருக்கெடுத்த தண்ணீரில் அப்பகுதியிலுள்ள வயல்கள் மூழ்கின. இதனால் வளவன் நகரை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பலரும் பரிதவித்தனர். மழை பாதித்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். இதுகுறித்த செய்தி தினகரனில் நேற்று படத்துடன் வெளியானது.

இதையடுத்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கூடுதல் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் ஏரல் தாசில்தார் அற்புதமணி, மண்டல துணை தாசில்தார் சேகர், ஆழ்வார்திருநகரி பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கடையனோடையில் உள்ள இல்லத்தில் தங்கவைத்து உணவு வழங்கினர்.  வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நாசரேத் - வளவன் நகர், தண்ணீரில் வயல்கள் மூழ்கிய நாசரேத் - வெள்ளரிக்காயூரணி பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தியதோடு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

Tags : region ,Nazareth ,
× RELATED பத்திர பதிவு அதிகாரிகள் மாற்றம்