சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 591 அலுவலர்கள் நியமனம்

சேலம், டிச.4: சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 591 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலையொட்டி உள்ளாட்சி அலுவலகங்களில் உள்ள கல்வெட்டுகள் காகிதத்தால் மறைக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் கிராம, மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. மேலும் 13ம் தேதி வேட்புமனு தாக்கல் இறுதிநாள், வாக்குப்பதிவு 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டமாக நடக்கிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்கள், 385 கிராம ஊராட்சிகள் உள்ளது. மேலும், மாவட்ட பஞ்சாயத்து அமைப்பும் உள்ளது. இதில், மாவட்ட பஞ்சாயத்துக்கு 29 கவுன்சிலர் பதவிகள், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகள், கிராம ஊராட்சித் தலைவர் பதவி, கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி ஆகியவற்றுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வேட்புமனு படிவங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்த தேதிகள் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உள்ள கல்வெட்டுகள் காகிதம் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக 44 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 547 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், 29 மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக 57 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வேட்புமனுக்களை இறுதி செய்வதற்கு என மொத்தம் 4 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெறுவார்கள். இதற்காக, 57 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மனுக்களை இறுதி செய்வதற்கு 20 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் மனுக்களை பெறுவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் 76 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களில் மனுக்கள் பெறப்படும். இதற்கென 385 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம ஊராட்சிகளுக்கான தேர்தலுக்கு மொத்தம் 20 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உள்ளாட்சி அலுவலகங்களில் ஒவ்வொரு ஆட்சியின் போதும் திட்டங்கள் மற்றும் பொறுப்பு வகித்தவர்களின் பெயர்கள் ெபாறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் காகிதத்தால் மறைக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>