×

களக்காட்டில் சகதிமயமான சாலையால் மாணவர்கள் பாதிப்பு

களக்காடு, டிச. 4:  களக்காட்டில் அரசு பள்ளிக்கு செல்லும் சாலை சகதிமயமாக மாறியுள்ளதால் மாணவ- மாணவிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.களக்காட்டில் இருந்து தலையணை செல்லும் சாலையில் ஐந்துகிராமம் அருகே களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 8ம் வகுப்பு வரை செயல்படுகிறது. களக்காடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் களக்காடு சுபத்ரா பூங்காவில் இருந்து பள்ளிக்கு செல்லும் சாலை, மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ரோடு முழுவதும் பல்லாங்குழிகள் போல் குண்டு -குழிகள் ஏற்பட்டுள்ளன. கற்களாகவும் சிதறி கிடக்கிறது. தற்போது களக்காடு பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி சாலை சகதிமயமாக மாறி நீச்சல் குளம்போல் மாறியுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே இந்த பள்ளிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சும் ரோடு பழுதடைந்து கிடப்பதை காரணம் காட்டி நிறுத்தப்பட்டு விட்டது.

எனவே மாணவ- மாணவிகள் நடந்தும், சைக்கிள்களிலும் பள்ளிக்கு சென்று வரும் நிலையில் சாலை சகதிமயமாக மாறி உள்ளதால் சகதிக்குள் இறங்கியே பள்ளிக்கு செல்ல வேண்டியதுள்ளது. சகதிக்குள் டூவீலர்கள் சிக்கிக் கொள்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது. களக்காடு பேரூராட்சிக்கு சொந்தமான இந்த சாலை போடப்பட்டு பல ஆண்டுகளை கடந்து விட்டதாகவும், சீரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் களக்காடு மலையில் உள்ள தலையணைக்கும், மூங்கிலடி, சிவபுரம், ஐந்துகிராமம், வனத்துறை அலுவலகம், வனத்துறை ஊழியர்கள் குடியிருப்பு போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இதையடுத்து பழுதடைந்து காணப்படும் இந்த சாலை வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே இனிமேலாவது சகதிமயமான சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : Kalakkad ,
× RELATED களக்காட்டில் வாலிபரின் வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு