×

பாபர் மசூதி தீர்ப்பு மறுபரிசீலனை கோரி நெல்லையில் உரிமை மீட்பு போராட்டம்

நெல்லை, டிச. 4: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி வருகிற 6ம் தேதி பேட்டையில் உரிமை மீட்பு போராட்டம் நடக்கிறது.கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் மீண்டும் மசூதியை கட்டித்தரக்கோரி நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த வழக்கில் கடந்த மாதம் 9ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும், அதற்கு பதிலாக பாபர் மசூதி கட்ட அயோத்தியில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து அயோத்தி நில வழக்கின் மூலமனுதாரரான சித்திக்கின் வாரிசான மவுலானா சயீத் ஆசாத் ரஷித் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் வெளியான இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் தமுமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பாபர் மசூதி வழக்கில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரியும், பாபர் மசூதியை இடித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கவும், சிறுபான்மை சமுதாயத்தினருக்கு எதிராக நடைபெறும் அரசியல் பழிவாங்கள் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை மீட்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் டிசம்பர் 6ம் தேதி உரிமை மீட்பு போராட்டம் நடத்தப்படுகிறது.நெல்லை பேட்டை மல்லிமால் தெருவில் அன்று மாலை நடைபெறும் போராட்டத்திற்கு  நெல்லை மாவட்ட தமுமுக, மமக தலைவர் ரசூல் மைதீன் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் சபியுல்லாகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தமுமுக, மமக நிர்வாகிகள் செய்து வருவதாக  மாவட்ட பொருளாளர் பேட்டை சேக் தெரிவித்துள்ளார்.


Tags : Babri Masjid ,
× RELATED பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்...