×

மதகு ஷட்டர் பழுதால் விகேபுரம் அருகே குளம் உடைந்தது

வி.கே.புரம், டிச. 4: வி.கே.புரம் டாணா அனவன்குடியிருப்பு  சிங்கம்பெருமாள் குளத்தில் மதகு ஷட்டர் பழுதாகி திறக்க முடியாததால் கரை உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் அப்பகுதி வயல்களில் நெற்பயிர்கள், வாழைகளை வெள்ளம் சூழ்ந்தது.
வி.கே.புரம் டாணா  அனவன்குடியிருப்பு பகுதியில் சிங்கம்பெருமாள் குளம் உள்ளது. 5  ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்திற்கு  மேற்குத்தொடர்ச்சி  மலையில் உள்ள கோரையாற்று ஊற்றுகள் மூலம் தண்ணீர் வருகிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிங்கம்பெருமாள் குளம், முழுவதுமாக நிரம்பி உள்ளது. இக்குளம் மூலம்  நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது இதன் பாசன பகுதியில் நெற்பயிர்,  வாழை மற்றும் கரும்புகள் பயிரிடப்பட்டு உள்ளன.
சிங்கம்பெருமாள் குளம் நிரம்பும்போது மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும். இக்குளம் முழுவதுமாக நிரம்பி பல ஆண்டுகளை கடந்து விட்டது. மேலும் குளத்தில் பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. இதனால் மதகு பகுதியில் விரிசல் ஏற்பட்டு ஷட்டரை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது குளம் நிரம்பிய நிலையில் மதகு அருகே கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. குளத்தில் இருந்து கரைபுரளும் தண்ணீர், அருகிலுள்ள வயல்களில் பாய்ந்து நெற்பயிர்கள், வாழை, கரும்பு பயிர்களை சூழ்ந்துள்ளன.
இப்பகுதி விவசாயிகளின் 25 ஆண்டுகால கோரிக்கையான கோரையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பணை, சிங்கம்பெருமாள் குளப்பகுதியை ஒட்டித்தான் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : pond ,Vaikapuram ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...