×

2 நாளுக்கு பின் முதியவர் உடல் மீட்பு

கம்பம், டிச.4:  கம்பம் அருகே முல்லையாற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன் பட்டி கள்ளர் பள்ளி தெருவை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (60). இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை நாராயணத்தேவன்பட்டியில் மேற்கு பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் புற்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ஆற்றில் விழுந்துவிட்டார். ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் அவரால் நீந்தி கரையேற முடியவில்லை. இதனால் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். கம்பம் தீயணைப்புத் துறையினர், போலீசார் இணைந்து முத்துக்கருப்பனை தேடி வந்தனர். நேற்று முன்தினம் கோகிலாபுரம் முல்லைப்பெரியாறில் கரையோரத்தில் முத்துக்கருப்பன் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கடலில் ஒரு ‘காப்பான்’ ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது. நம் நாட்டை காப்பது மட்டுமல்ல... அண்டை மற்றும் எதிரி நாடுகள் நம்மை தாக்க அனுமதிக்காமல், திருப்பி அடிக்கும் வல்லமை கொண்ட படை, ஒவ்வொரு நாட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த வகையில் நம் நாட்டில் வலுவான படைகளில் ஒன்றான இந்திய கடற்படையை, கவுரவிக்கும்விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதியை, ‘தேசிய கடற்படை தினம்’ என கொண்டாடி வருகிறோம். இந்திய நாடானது ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படை என 4 சீருடை அணிந்து பாதுகாப்பு படையாக விளங்குகிறது. இந்திய ஜனாதிபதி ராணுவ தலைமை கமாண்டராக இருக்கிறார். நமது ராணுவப்படையானது, நான்கு நட்சத்திர ராணுவ தளபதிகளால் கட்டுப்படுத்தப்பட்டுகிறது. மேலும், இந்திய ஆயுதப்படைக்கு பல துணைப்படை அமைப்புகள், உளவுத்துறை நிறுவனங்கள் பக்கபலமாக இருந்து வருகின்றன.
இந்திய கடற்படையானது 1971ம் ஆண்டில் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தது. அப்போது டிசம்பர் 4ம் தேதி கராச்சி துறைமுகம் மீது திடீரென அதிரடியாக தாக்குதலை கையாண்டது. எதிர்பாராத இந்த தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்தது. முக்கியமாக, அந்நாட்டு போர் கப்பல்களான ஹபீஸ், கைபார் ஆகியவை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது. மேலும் ஷாஜகான் எனும் கப்பலும் பலத்த சேதத்திற்கு உள்ளானது. மேலும் துறைமுகத்தில் இருந்த எரிபொருள் கிடங்குகளையும் அழித்தது. இந்த தாக்குதல்களுக்கு ‘ஆபரேஷன் டிரிடென்ட்’ (ஆபரேஷன் திரிசூலம்), ‘ஆபரேஷன் பைதோன்’ (ஆபரேஷன் மலைப்பாம்பு) எனப் பெயரிடப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை கொண்டாடும்விதமாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதியைத்தான், இந்திய கடற்படை தினமாக கொண்டாடி வருகிறோம்.

ஒரு நாடானது மற்றொரு நாட்டின் மீது பல்வேறுவிதமான தாக்குதல்களை கையாளும். ஒன்று வான்வழி தாக்குதல். அதாவது, போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியோ அல்லது ஏவுகணையை வீசி எதிர் நாட்டை நிலைகுலைய செய்தல் ஆகும். மற்றொன்று கடல் வழி தாக்குதல். ஒரு நாட்டின் கடல் எல்லையை சுற்றிலும் கடற்படை கப்பல்கள் எந்நேரமும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருக்கும். இந்த படையானது எந்நேரமும் கண்காணிப்பில் படுதீவிரமாக இருக்கும். சிறிது அசந்தாலும் கடல் எல்லை வழியாக ஊடுருவி, பலமிக்க தாக்குதலை நடத்தலாம். மிதந்து வரும் கப்பல்கள் மூலமாகவும், நீர்மூழ்கி கப்பல்கள் மூலமாகவும் தாக்குதலை ஒரு நாடானது கையாளும். ரோந்துப்பணிகள் கடலில் நடப்பதால், இதில் பணியாற்றும் வீரர்கள் எந்த ஒரு சூழலையும் சந்திக்கும் சூழ்நிலையில் தயாராகவே இருப்பார்கள். இந்திய கடற்படையானது மும்பை, விசாகபட்டிணம், கொச்சி, போர்ட் பிளேர் என கடற்படை 4 மண்டலங்களாக செயல்படுகிறது. இந்திய கடற்படை தினத்தை கொண்டாடும் வகையில், கடற்படை சார்பில் பல்வேறு சாகசநிகழ்ச்சிகளில் வீரர்கள் ஈடுபடுவது வழக்கம். பாதுகாப்பு துறையில் வீரத்துடன் போரிட்டு, தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு ‘பரம்வீர் சக்ரா’, ‘மகாவீர் சக்ரா’ மற்றும் ‘வீர் சக்ரா’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு, வீரர்களின் வீர சாகசங்கள் கவுரவிக்கப்படும். கடந்த சில நாட்களாக இந்திய கடலோர எல்லைப்பகுதிகளில் தங்கம், கஞ்சா உள்ளிட்டவைகள் அதிகளவு கடத்தப்படுகின்றன. எனவே, கடலோர காவல்படையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இளைஞர்கள் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதை பெருமையாக கருத வேண்டும். அப்பணியில் ஈடுபடுவோரை நாம் மதித்து போற்ற வேண்டும்.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா