குடந்தையில் மழை பெய்ததால் காவல் நிலைய வளாகத்தில் தஞ்சம் புகுந்த மாடுகள்

கும்பகோணம், டிச. 4: மழை பெய்ததால் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய வளாகத்துக்குள் மாடுகள் தஞ்சம் புகுந்தது.கும்பகோணம் நகர முழுவதும் சாலை, தெருக்களில் பகல், இரவு நேரங்களில் மாடுகள் கூட்டமாக சுற்றி திரிகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை புகாரளித்தும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் மாற்றுத்திறனாளி ஒருவரை மாடு முட்டியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.இதனால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையறிந்ததும் ஆர்டிஓ வீராச்சாமி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி. குழு அமைத்தார். அதில் சாலைகளில் மாடுகள் திரிந்தால் கோசாலையில் விடப்படுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இக்குழு அமைத்து சில நாட்களுக்கு முன்பு 45 மாடுகளை பிடித்தனர். இந்நிலையில் தற்போது கும்பகோணம் முழுவதும் சாலைகளில் மாடுகள் திரிந்து வருகிறது. ஆனால் சில நாட்களாக மாடுகள் திரிவதை பிடிக்காமலும், அதை கண்டுகொள்ளாமலும் அதிகாரிகள் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் கும்பகோணம் சாலையில் திரிந்த மாடுகள் பலத்த மழையால் ஒதுங்க இடமில்லாமல் காவல் நிலைய வளாகத்தில் தஞ்சம் புகுந்தது. வேறு வழியின்றி காவல் நிலைய வளாகத்துக்குள் நுழைந்த மாடுகளை போலீசார் விரட்டி விட்டனர். இதனால் பொற்றாமரை குளம் சாலையில் மாடுகள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.எனவே சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் விட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>