மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவரை அனுமதித்தோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

தஞ்சை, டிச. 4: தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஒரு மதில் சுவர் இடிந்து விழுந்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் 17 பேர் இறநதனர். இந்த மதில் சுவர் 80 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்டது என கூறுகின்றனர். இதை கட்டியவர் மிகப்பெரிய துணிக்கடையின் உரிமையாளர். இவரது வீட்டுக்கு அருகில் உழைக்கும் மக்களான அருந்ததியர் குடும்பங்கள் பல இருக்கின்றன. அவர்கள் தன் குடும்பத்தார் பார்வையில் படக்கூடாது என்பதற்காக சிறைச்சாலை சுவரை போல் மதில் சுவரை எழுப்பியுள்ளார். இந்த தீண்டாமை சுவரை தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் ஏற்கனவே தகர்த்தெறியப்பட்டிருக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசியல் சார்பு, சமூக ஆதிக்கவாதிகள் சார்பு அதிகாரம் தான் நடந்து கொண்டிருக்கிறது. சட்டத்தில் கூறப்படும் நடுநிலை அரசு இல்லை என்பதற்கு இந்த உயிர்பலிகள் ஒரு சான்றாகும். “மதில் சுவர் மாமன்னர் சிவசுப்பிரமணியனை” கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் செய்த மக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து சமரசம் பேசி கலைய செய்திருக்கலாம். ஆனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்கும் உத்தியை ஆட்சியாளர்கள் கடைபிடித்தது கண்டனத்துக்குரியது. தீண்டாமை சுவரை எழுப்பிய சிவசுப்பிரமணியனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும். அச்சுவரை அகற்ற கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் அகற்றாமல் போனதற்கு யார் யார் காரணம் என அறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியான ஒவ்வொருவருக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: