×

நாணல் காடாக மாறிய வைகை ஆறு


பரமக்குடி, டிச.4: பரமக்குடி வைகை ஆற்றில் நாணல் செடிகள் முளைத்துள்ளதால், வைகை ஆறு நாணல் காடாக மாறியுள்ளது. இதனால் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நாணல் செடிகளை அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசன விவசாயத்திற்கு ஆதாரமாக வைகை ஆறு உள்ளது. மிகவும் பரந்து விரிந்த பெரிய ஆறாக இருந்தது. குடிக்க தண்ணீர் வேண்டும் என்றால் கையால் தோண்டி தண்ணீரை குடித்து தாகம் தீர்த்து வந்தனர். அந்த அளவுக்கு மண் வளமும், நீராதாரமும் இருந்தது. நிலத்தடி நீரை சேமித்து வைத்து கொள்ளும் அளவுக்கு இருந்த மணல், தற்போது திருடுபோனதால் கட்டாந்தரையாக மாறியுள்ளது. கமுதக்குடி, மனிநகர், காட்டுபரமக்குடி, காக்காதோப்பு, உரப்புளி உள்ளிட்ட பகுதிகளில் வைகை ஆற்றின் உள்பகுதிகளில், நாணல் செடிகளும், கருவேல மரங்களும் அடர்ந்து கானப்படுவதால், நிலத்தடிநீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அடர்ந்து காணப்படும் நாணல் மற்றும் கருவேல மரங்களால், பொதுமக்கள் ஆற்றுக்குள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

ஆற்றின் இடதுபுற கரையில் உள்ள மஞ்சள்பட்டிணம், வைகை நகர், புதுநகர், எமனேஸ்வரம், வளையனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வைகை ஆற்றை கடந்துதான் வரவேண்டியுள்ளது. கருவேல மரங்கள் மற்றும் நாணல் செடிகளின் புதர்களை பயன்படுத்தி கொள்ளும் சமூக விரோதிகள், பெண்களை கேலி செய்வது, மது அருந்துவது, பணம் வைத்து சூதாட்டம் என்று பல கோணங்களில் சமூக விரோத செயல்கள் தினமும் நடந்து வருகிறது.
அதுபோல் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளவர்களின் புகலிடமாக மாறிவருகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரமக்குடியில் உள்ள அமைப்புகள் புகார் தெரிவித்தாலும், சித்திரை திருவிழாவிந்கு மட்டும் பெயரளவில் பல லட்சங்களை செலவு செய்யும் பொதுப்பணி துறையினர் நிரந்தரமாக நாணல் மற்றும் கருவேல மரங்களை அழிக்க நடவடிக்கை இல்லை. மேலும் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி வைகையை காப்பாற்ற, சிறப்பு நிதி ஓதுக்கீடு செய்து, நாணல் மற்றும் கருவேல மரங்களை அழிக்கவேண்டும். இதனால் அங்கு நடைபெரும் சமூக விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Vaigai River ,forest ,
× RELATED காட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட...