மதுரை விராட்டிபத்து பகுதியில் பழுதடைந்த சாலைகளில் மழைநீர்-கழிவுநீர் சங்கமம் போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் அறிவிப்பு

மதுரை, டிச.4: மதுரை விராட்டிபத்து பகுதியில் பழுதடைந்த சாலைகளில் மழைநீருடன், சாக்கடை நீரும் தேங்கிக் கிடந்து கொசுக்களுடன், நோய்களை பரப்பி வருகிறது. கண்டுகொள்ளாத மாநகராட்சியை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.மதுரை மாநகராட்சியில் உள்ள விராட்டிபத்து பகுதியில் முத்துத்தேவர் காலனி மற்றும் ஹரிஜன் காலனி ரோடு மிக மோசமாக இருக்கிறது. இதில் வாகனங்களில் மட்டுமல்லாது, நடந்தும் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், இந்த ரோட்டில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து தேங்கியுள்ளன. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, இப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களாலும் பாதித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த ராஜன் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிக குடும்பங்கள் இருக்கின்றன. பாதாளச்சாக்கடை வசதி இருந்தும், மெயின் லைன் இந்த பகுதியில் இருப்பதால், பம்பிங் ஸ்டேஷனிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்படாமல், பாதாளச்சாக்கடை மூடி வழியாக பீறிட்டு ஆறாக ஓடுகிறது. துர்நாற்றத்துடன், கியாஸ் வெளிப்படுகிறது. இந்த சாக்கடைக் கழிவுநீர் ரோட்டில் தேங்கி, மழைநீருடன் கலந்து நோய்களை பரப்புகிறது. கொசுக்களால் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறோம். ஒரு அடிக்கும் மேலாக இங்குள்ள மழைநீர் வாய்க்கால்களிலும் கழிவுநீர் தேங்கிக் கிடந்து, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மாநகராட்சி சிறப்பு நடவடிக்கை மூலம் எங்கள் பகுதி சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். பம்பிங் ஸ்டேஷன் செயல்படவும், கழிவுநீர் வெளியேறாமலும் செய்ய வேண்டும். சீர் செய்யாவிட்டால், மக்களைத் திரட்டி மாநகராட்சியை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

Related Stories:

>