மேலூர் நான்குவழிச்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகனங்கள் ஹைவே போலீசார் கவனிப்பார்களா?

மேலூர், டிச. 4: அதிவேகமாக வாகனங்கள் செல்லும் நான்குவழிச்சாலையில் திடீர் திடீரென குறுக்கிடும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அதை ஹைவேபட்ரல் போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரையில் இருந்து திருச்சி சென்னை வரை அதிவேகமாக செல்ல வசதியாக நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. எதிர் திசையில் வாகனங்கள் வராது என்பதால் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்துமே 100 கி.மீ. வேகத்திற்கு குறையாமல் செல்கின்றன. சாலை அமைத்த காலத்தில் இதை அறியாமல் ஆங்காங்கே உள்ள கிராம மக்கள் இச்சாலைகளை அசால்டாக கடப்பது என்று இருந்தனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கில் உயிர்பலிகள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்தே தற்போது கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, சாலைகளை அதிக கவனத்துடன் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு பதிலாக, கிராம மக்கள் வளர்க்கும் கால்நடைகள் சாலைகளில் குறுக்கில் எப்போது வேண்டுமானாலும் கடக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்குவது அடிக்கடி ஏற்படுகிறது. கிராம மக்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி விடுகின்றனர். இவையே காலை மற்றும் மாலை வேளைகளில் சாலையை கடந்து செல்கின்றன. கோயில் காளைகளும் ரோட்டில் வலம் வருகின்றன. இதனால் இந்த கால்நடைகள் அடிப்பட்டு இறப்பதுடன், மனிதர்களும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இது அடிக்கடி கருங்காலக்குடியில் நடக்கும் ஒரு சம்பவமாக உள்ளது. இப்பகுதியில் சுற்றி திரியும் மாடுகள் நான்குவழிச்சாலையில் ஹாயாக படுத்து கொண்டு விபத்திற்கு வழி வகுக்கிறது. அதிகமாக கால்நடைகள் சாலையை ஆக்கிரமிக்கும் இடங்களில் ஹைவேபட்ரல் தங்கள் கவனத்தை செலுத்தி அந்த கால்நடைகளின் உரிமையாளர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும். இதனால் தேவையற்ற விபத்துக்களும் தவிர்க்கப்படும்.

Related Stories:

>