பழநி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் துவக்கம்

பழநி, டிச. 4: பழநி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்க உள்ளது. பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை திருவிழா. 7 நாட்கள் நடைபெறும் இவ்விழா இன்று மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் துவங்க உள்ளது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்குப்பின் காப்பு கட்டப்படும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, மாலை 7 மணிக்கு தீபாராதனை மற்றும் தங்கரத புறப்பாடு போன்றவை நடைபெறும். அதனைத்தொடர்ந்து 6 நாட்களும் இப்பூஜைகள் நடைபெறும். டிசம்பர் 9ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது நடைபெறும். டிச. 10ம் தேதி திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.

அதிகாலை 4.30 மணிக்கு விளா பூஜை நடைபெறும். தொடர்ந்து சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் யாகசாலை தீபாராதனையும், மலைக்கோயிலில் 4 மூலைகளில் தீபம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும். தொடர்ந்து திருஆவினன்குடி கோயில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோயில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Related Stories: