வெங்காய பயிரில் அழுகல் நோய் கட்டுப்படுத்த ஆலோசனை

திண்டுக்கல், டிச. 4: வெங்காய பயிரில் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் வெங்காயம் சுமார் 6,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வெங்காய பயிர்களில் அழுகல் நோய் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இதனை தடுக்கும் முறைகள் குறித்து திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குனர் (பொ) சீனிவாசன் கூறியதாவது, ‘வெங்காய பயிர்களில் 22-28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். தொடக்கத்தில் இலைகள் மஞ்சளாக ஆரம்பித்து, நுனியிலிருந்து காய ஆரம்பிக்கும். பின்னர் வேர்கள் அழுக ஆரம்பித்து விதை வெங்காயம் அழுக ஆரம்பிக்கும். மண் மூலம் பரவும் நோய் என்பதால் பயிர் சுழற்சி மற்றும் கலப்பு பயிர்கள் முறையில் பயிரிடுவதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம். நாற்றாங்காலில் விதைப்பதற்கு 30 நாள் முன்பு மண் வெப்பமூட்டப்பட வேண்டும். நாற்றாங்களை ஒரே மேட்டுப்பாத்தியில் தொடர்ந்து அமைப்பதை தவிர்க்க வேண்டும். நாற்றாங்காலில் நன்கு மக்கிய தொழு உரத்தை பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான மண் ஈரத்தை தவிர்க்க வேண்டும். பயிர்களுக்கு மழைநீர் தேங்காமல் தகுந்த வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நாற்றாங்காலில் மிக நெருங்கி நடவு செய்வதை தவிர்த்தல் வேண்டும்.விதை நேர்த்தி டிரைக்கோடெர்மா விரிடி 1 கிலோவிற்கு 4 கிராம் வரை கலந்து ஒரு எக்டருக்கு 2.5 கிலோ அளிக்கப்பட வேண்டும். மேலும் அடியுரமாக வி.ஏ.எம் ஒரு எக்டருக்கு 12.5 கிலோ அளிக்கலாம். காப்பர் ஆக்ஸி குளோரைடு ஒரு லிட்டருக்கு 2.5 கிராம் அளவில் சேர்த்து வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் வெங்காய பயிரில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்’ என்றார்.

Related Stories: