பழநி நகரில் சுற்றித்திரியும் வடமாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டும்

பழநி, டிச. 4: பழநி நகரில் சுற்றித்திரியும் வடமாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டுமென இந்து தமிழர் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராமரவிக்குமார், அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மனோஜ், மாவட்டக்குழு உறுப்பினர் மருதுபாண்டி, நகரப் பொறுப்பாளர்கள் காளிமுத்து, மகுடீஸ்வரன், ஹரி உள்ளிட்டோர் பழநி கோயில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, போலீஸ் டிஎஸ்பி விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.அம்மனுவில் கூறியிருப்பதாவது,பழநி கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் அதிகளவு வருகின்றனர். இவர்களிடம் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்த ஏராளமானோர் அடிவார பகுதியில் உள்ளனர். இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பழநி புறநகரில் டெண்ட் அமைத்து தங்கி மத்தளம் மற்றும் பிளாஸ் ஆப் பாரீஸ் வகை மாவினால் செய்யப்பட்ட பொம்மைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர். வடமாநில வியாபாரிகள் சாலைகளின் நடுவில் நின்று கொண்டு, பக்தர்களை பெரும் தொந்தரவு செய்கின்றனர். பக்தர்கள் கூட்டத்தைவிட வடமாநில வியாபாரிகளின் கூட்டமே அடிவார பகுதியில் அதிகளவு உள்ளது. இதன்காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் எடுக்கப்படும் நடவடிக்கையால் ஏழை உள்ளூர் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, வடமாநில வியாபாரிகள் வியாபாரம் செய்ய போலீசார் மற்றும் கோயில் நிர்வாகம் ஒருங்கிணைந்து மாற்று இடம் ஒதுக்கித்தர வேண்டும். இவ்வாறு சுற்றித்திரியும் வடமாநிலத்தவர்களில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாரும் உள்ளனரா? என்பதை கண்டறிய அவர்களது ஆதார் அட்டை மற்றும் அவர்களின் சொந்தஊரில் உள்ள காவல்நிலையத்தில் நன்னடைத்தை சான்று வாங்கி வர நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளுர் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி இடம் ஒதுக்கித்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>