இடையகோட்டையில் சந்தன உருஸ் விழா டிச.8ல் துவங்குகிறது

ஒட்டன்சத்திரம், டிச. 4: ஒட்டன்சத்திரம் வட்டம் இடையகோட்டையில், குத்புல் அக்தாப் கௌதுல் அலம் முஹைய்யிதீன் அப்துல் காதர் ஜீலானி ஆண்டவர்களின் தாபூத்தென்னும் சந்தன உருஸ் விழா டிச.8ல் துவங்கி டிச.10 வரை நடக்கிறது.

முன்னதாக நவ. 28ம் தேதி வியாழனன்று தர்காவிலிருந்து கொடி ஊர்வலம் வந்து கொடியேற்றுதல் நடைபெற்றது. டிச.7ம் தேதி மாலை வாசனை மாலையுடன் பஹதாத் தர்கா இரவ்லா ரீபின் போர்வை ஊர்வலம் வருகிறது. டிச. 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் சந்தன உருஸ் ஊர்வலம் வருகிறது. டிச. 11ம் தேதி காலை சந்தனம் வழங்குதல் நடைபெறும். அன்று மாலை ஹத்தமல் குர்ஆன் நிறைவுக்கு பின்னர் புனிதக்கொடி இறக்குதல் நடைபெறுகிறது. முதல்நாளான டிச. 8ம் தேதி சென்னை இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இன்னிசையும், 2ம் நாளான டிச. 9ம் தேதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பைஜீ குழுவினர், 3ம் நாளான டிச. 10ம் தேதி இடையகோட்டை தீன் உதயம் ஷாகுல் ஹமீது சிஷ்தி ஆகியோரின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெறவுள்ளது. உருஸ் விழா நாட்களில் வண்ண மின்விளக்குகளின் அலங்காரங்கள், வியப்பூட்டும் வாண வேடிக்கைகள், சிறப்பு வித்வான்களின் நாதஸ்வரங்கள், பேண்ட் செட் வாத்தியங்கள், நகைப்பூட்டும் நையாண்டி மேளங்கள், கொட்டு மேளங்கள் இடம்பெறும். வழக்கம்போல் அனைத்து சிறப்புகளும் அதிவிமரிசையாய் இவ்வாண்டும் நடக்கவிருப்பதால் விழாவிற்கு அனைத்து மக்களும் தவறாது வருகை தந்து உலக தலைமை மகானின் அருளை பெற்று செல்லுமாறு நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>