பழநி அருகே பாலம் உடைந்ததால் போக்குவரத்து முடக்கம் பொதுமக்கள் அவதி

பழநி, டிச. 4: பழநி அருகே சண்முகம்பாறையில் தொடர் மழையின் காரணமாக தற்காலிக பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலையோர கிராமங்களில் உள்ள ஓடைகளில் நீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பழநி அருகே சண்முகம்பாறையில் இருந்து புளியம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையின் இடையே சுள்ளிக்காத்து ஓடை செல்கிறது. இந்த ஓடையின் மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. கனமழை நேரங்களில் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்லும். அப்போது போக்குவரத்து பல நாட்களுக்கு முடங்கி போய்விடும்.எனவே, இங்கு பாலம் அமைத்துத்தர வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனடிப்படையில் நபார்டு வங்கி மூலம் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் இங்கு ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடந்து வருகிறது. இதன்காரணமாக பாலத்தின் அருகிலேயே போக்குவரத்திற்காக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. இதன் காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளப்பெருக்கில் பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக இச்சாலையில் நெய்க்காரப்பட்டியில் இருந்து புளியம்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த மினிபஸ் போக்குவரத்து முடங்கியது. இப்பகுதி மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி பழநிக்கு செல்ல நேரிட்டது. இந்நிலையில் நேற்று தற்காலிக பாலத்தில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது. இதன்பின்பு வாகன போக்குவரத்து துவங்கியது. பாலத்தின் கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>