×

தேர்தல் பணிக்கான சிறப்பு கையேடு

திருப்பூர்,  டிச. 4: திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேர்தல் நடத்தும்  அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி  வகுப்புகள் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல்  அலுவலருமான விஜயகார்த்திகேயன் நேற்று துவக்கி வைத்தார். திருப்பூர்  மாவட்டத்தில், 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய  வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2295 கிராம  ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறவுள்ளது. ஊரக  (கிராமப்புறம்) மொத்த வாக்காளர்கள் 995765 உள்ளனர். மேற்படி வாக்காளர்கள்  வாக்குபதிவு செய்ய வசதியாக ஊரகப்பகுதிகளில் (கிராமப்புறம்) 1704  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 13 ஊராட்சி ஒன்றியங்களில்  உள்ள 1704 வாக்குச்சாவடிகள் 129 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வாக்கு  எண்ணிக்கைக்கு 13 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இத்தேர்தலை நடத்துவதற்கு 28 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் மற்றும்  363 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட கலெக்டருமான விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.  இப்பயிற்சி வகுப்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து  வேட்புமனு பெறுதல், வேட்புமனுவினை கூர்ந்தாய்வு செய்வது உள்ளிட்ட தேர்தல்  தொடர்பான அனைத்து செயல்முறைகள் குறித்தும் அலுவலர்களுக்கு பயிற்சி  வழங்கப்பட்டது. மேலும், அலுவலர்கள் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக  பின்பற்றி நமது மாவட்டத்தில், சிறப்பான முறையில் தேர்தலை நடத்திட வேண்டுமென  அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும், தமிழ்நாடு  மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில், தயாரித்த ஊரக உள்ளாட்சி தேர்தல்கள்  தொடர்பான அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல்  நடத்தும் அலுவலர்களுக்கான தேர்தல் பணிகள் தொடர்பான சிறப்பு கையேட்டினையும்  மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டார். இதில், கலந்து  கொண்ட தேர்தல் அலுவலர்கள் பேசியதாவது, சில இடங்களில் தேர்தலின் போது  மட்டுமின்றி வேட்புமனுத்தாக்கலின் போதே அச்சப்படக்கூடிய சூழல் கடந்த  காலங்களில் இருந்துள்ளது. ஆகவே, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட  பகுதிகளில் சமூகம் மற்றும் அங்குள்ள சூழல் குறித்து அறிந்து வைத்திருக்க  வேண்டும். வேட்புமனுத்தாக்கலை அனைவரும் சுதந்திரமாக செய்வதற்கு சூழலை  தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். ஒருவர் அதிகபட்சம் 4  வேட்புமனுக்கள் அளிக்கலாம். அதற்கு மேல் அளித்தாலும் அதனை  பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால், பரிசீலனைக்கு 4 மனுக்களை எடுத்துக்கொள்ள  வேண்டும். ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர் வார்டு  மாறியிருந்தாலும், அவரை முன்மொழிபவர் போட்டியிடும் வார்டுக்குள் இருக்க  வேண்டும்.  ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் அந்த ஊராட்சியை  சேர்ந்தவராக இருக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது, மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், தாராபுரம்  சப்-கலெக்டர் பவன்குமார் , திட்ட இயக்குநர் கோமகள் (மகளிர்திட்டம்), மாவட்ட  கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சந்திரகுமார், உதவி திட்ட அலுவலர்  முருகேசன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும்  அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா