×

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் பாறை விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

குன்னூர், டிச.4: குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் மலைப்பாதையில் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதை அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 150 அடி உயரத்தில் இருந்து உருண்டு வந்த பாறை சாலையின் நடுவே விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாததால் தொடர்ந்து இரண்டாவது நாளாக குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராட்சத பாறைகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி தோல்வி அடைந்ததால் தற்போது பாறைகளை துளையிட்டு உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்தால் மட்டுமே மீண்டும் வாகன போக்குவரத்து இயக்கப்படும். தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. குன்னூர்  மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி, டபுள் ரோடு , காந்திபுரம்,  சேலாஸ் கரும்பாலம் உள்ளிட்ட பல கிராமங்களில் செல்லக்கூடிய பள்ளி மாணவ  மாணவிகள் கடும் பாதிப்பு அடைந்தனர். அவ்வழியே பேருந்துகள் இயக்கப்படாததால்  பள்ளி மாணவ மாணவிகள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

Tags : rock fall ,road ,Coonoor Mettupalayam ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...