×

கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு

கோவை, டிச.4: தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கோவை டாடாபாத்தில் உள்ள தலைமைப்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த பல வருடமாக லைன் மேன், ஹெல்பர், போர்மேன் போன்ற கள ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வந்தது. இந்நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் கேங்மேன் என்ற புதிய பணி உருவாக்கப்பட்டது. மாநிலம் முழுதும் 5000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான கல்வி தகுதி ஐந்தாம் வகுப்பு, வயது வரம்பு 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மூன்று கட்ட உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கோவை மாவட்டத்தில் சுமார் 2104 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று முன்தினம் துவங்கி வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. நேற்று நடந்த உடற்தகுதி தேர்வில் 120 பேர் கலந்துகொண்டனர். இவர்களுக்கு  கம்பம் ஏறுதல், அலுமினிய மின்கடத்தியில் டிஸ்க் பொருத்துதல், வி ஆர்மை எடுத்துக்கொண்டு 100 மீ துரத்தை ஒரு நிமிடத்தில் கடத்தல் என மூன்று கட்டங்களில் உடற்தகுதி தேர்வு நடந்தது.

Tags : Gangman ,
× RELATED நங்கநல்லூர், கொரட்டூரில் மின்சாரம் பாய்ந்ததில் கேங்மேன், வக்கீல் பலி