வரட்டுப்பள்ளம் அணை உபரிநீரை திருப்பி விட்டதால் விவசாயிகள் மறியல்

அந்தியூர், டிச. 4:   அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை உபரி நீரை வேறோரு ஏரிக்கு திருப்பி விட்டதால் விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையம் ஏரிக்கு வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வரும் உபரி நீர் செல்லும் வழிப்பாதை பொதுப்பணித்துறை அதிகாரிகளால் தடுக்கப்பட்டு ஆப்பக்கூடல் ஏரிக்கு திருப்பி விடப்பட்டதாக விவசாயிகள் மத்தியில் புகார் எழுந்தது.

இதன் காரணமாக சந்தியபாளையம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அண்ணாமடுவு என்ற இடத்தில் அந்தியூர்- அம்மாபேட்டை- பவானி பிரிவு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த அந்தியூர் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள் கூறியதாவது: வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வரும் உபரி நீர் கெட்டி சமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி என ஒவ்வொரு ஏரியாக நிரம்பி கடைசியாக ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்ல வேண்டும். ஆனால் தற்போது கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம், அந்தியூர் பெரிய ஏரி ஆகிய மூன்று ஏரிகளுக்கும் வரட்டுப்பள்ளம் அணை உபரி நீர் வந்து நிரம்பி விட்டது.

இதற்கு அடுத்தபடியாக சந்தியபாளையம் ஏரிக்கு வர வேண்டிய தண்ணீரை தடுத்து நிறுத்தி கடைசியாக உள்ள ஆப்பக்கூடல் ஏரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருப்பி விட்டுள்ளனர்.  இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை. இந்த ஏரியை நம்பி சுமார் 4 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர்.

எங்கள் ஏரிக்கு தண்ணீரை திருப்பி விட வேண்டும். மேலும் எங்களுக்கு மட்டுமே தண்ணீர் விட வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. அனைவருக்கும் சமமாகப் பிரித்து விடுங்கள் என்றுதான் கேட்கிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரை உடனடியாக ஏரிக்கு திருப்பிவிட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர்.  இந்த சாலை மறியலின் காரணமாக நேற்று மாலை அந்தியூர்-அம்மாபேட்டை- பவானி பிரிவு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: