பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு விடிய விடிய தூங்காமல் தவித்த பொதுமக்கள்

பவானி, டிச. 4:   பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி நகரின் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து நேற்று முன்தினம் உபரிநீர் 30 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டது. பவானி ஆற்றில் வெளியேறிய உபரி நீரால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் இரவு பவானியை வந்தடைந்தது. இதையடுத்து, பவானி தாசில்தார் பெரியசாமி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில் மற்றும் வருவாய் துறையினர் கரையோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதோடு, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

பவானி நகரின் கரையோர பகுதிகளான சோமசுந்தரபுரம், பழனிபுரம் தெரு, சீனிவாசபுரம், மெக்கான் வீதி, பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் கரையோர வீடுகளை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில பகுதிகளில் தெருக்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். பவானி காளிங்கராயன் அணைக்கட்டில் பிரதான அணை, முறியன் அணைக்கட்டை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி பள்ளிகள் இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்குவதற்காக திறந்து வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு 29 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, 9 மணிக்கு 17 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இருந்தபோதிலும் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்ததால், கரையோர பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.

Related Stories:

>