ஆழ்வார்திருநகரி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் தென்கரை குளத்துக்கரை உடையும் அபாயம்

வைகுண்டம், டிச. 4: ஆழ்வார்திருநகரி அருகே பிள்ளைமடையூர் பகுதியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தென்கரை குளத்தின் கரை உடையும் அபாயம் நிலவுகிறது. அதிகாரிகள் பாராமுகத்தால் மணல் மூடைகளை அடுக்கி சீரமைக்கும் பணியில்  அப்பகுதி இளைஞர்கள் களமிறங்கினர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மருதூர் மேலக்காலில் இருந்து பாசன வசதி பெறும் தென்கரை குளம் சுமார் 1636ஏக்கர் பரப்பளவை கொண்டது. இதன்மூலம் சுமார் 2697ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் தென்கரை குளம் பொதுபணித்துறையினரின் அலட்சியப் போக்காலும் முறையான பராமரிப்பின்றியும் தூர்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வரை விவசாயத்திற்கு தேவையான தண்ணீரின்றி தென்கரை குளத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்குமாறு விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்தனர்.  இந்நிலையில், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பாசன குளங்கள் நிறைந்து வரும் நிலையில் மருதூர் மேல காலிலிருந்து பாசன வசதி பெறும் தென்கரை குளமும் நிரம்பியது. இருப்பினும் இப்பகுதியில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்காத நிலையில் ஆழ்வார்திருநகரி அருகே பிள்ளைமடையூர் பகுதியில் தென்கரைகுளம் உடையும் அபாயம் உருவானது. அத்துடன் அருகேயுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளிலும் விளைநிலங்களிலும் தண்ணீர் புகும் அபாயம் நிலவுகிறது.

 இதனால் பதறிய மக்கள், இதுகுறித்து, அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து மக்களே மணல் மூடைகளை கொண்டு கரைகளை பலப்படுத்தும் பணியில் களமிறங்கினர்.

 இருப்பினும் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பல நூற்றாண்டுகளை கடந்த இக்குளம் தாமிரபரணி பாசனகுளங்களில் மாவட்டத்தின் 2வது பெரிய குளமாகும். முதல் பெரிய குளமான கடம்பாகுளத்தை, கடலில் பாதி கடம்பா குளம்., கடம்பாவில் பாதி தென்கரை குளம் என விவசாயிகள் குளத்தின் பரப்பளவை குறிப்பிடுகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குளத்தின் கரை உடைப்பு ஏற்பட்டால், பிள்ளைமடையூர் பகுதி மட்டும் இன்றி ஆழ்வார்திருநகரி பகுதிகளிலும் பலத்த சேதத்தை  ஏற்படுத்தும்.

  எனவே, தென்கரை குளத்தில் கரைகளை பலப்படுத்த வேண்டும். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசனத்திற்கு தென்கரை குளத்தை அதன் முழு கொள்ளவில் தண்ணீரை சேமிக்கும் வகையில் தூர்வார வேண்டும். என சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தரத் தீர்வு

 பிள்ளைமடையூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்  கூறுகையில், ‘‘தென்கரை குளத்தின் கரையோரத்தில் எங்களது ஊர் உள்ளது.  தற்போது குளத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் கரை உடைப்பு  ஏற்படும் நிலை உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை உரிய நடவடிக்கை எடுக்கும் படி  கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் எங்கள்  பகுதியில் உள்ள இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து மணல் மூடைகளை கொண்டு  நாங்களே கரைகளை பலப்படுத்தினோம். பிள்ளைமடையூரில் உரிய போக்குவரத்து வசதி,  தெருவிளக்குகள் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி  தவிக்கிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் இதுவிஷயத்தில் தக்க நடவடிக்கை எடுத்து  எங்களை காப்பாற்ற வேண்டும். மேலும் இந்த பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண  முன்வர வேண்டும்’’ என்றார் அவர்.

Related Stories: