தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 8.02 லட்சம் பேர் வாக்காளர்கள்

தூத்துக்குடி, டிச. 4: தூத்துக்குடி  மாவட்டத்தில் இரு கட்டங்களாக 3,537 உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 8.02 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளதாகவும், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்  இருப்பதாகவும் கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.  தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்  கலெக்டர் கூறுகையில், ‘‘தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தூத்துகுடி மாவட்டத்தில் 2  கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக வரும் 27ம் தேதியும், 30ம் தேதி 2ம்  கட்டமாகவும் தேர்தல் நடைபெறும். மாவட்டத்தில்  12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 174 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்படவேண்டும். மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களும், 403  ஊராட்சிகளில் 2943 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படவேண்டும். முதல் கட்ட  தேர்தலில் தூத்துக்குடி, கருங்குளம், வைகுண்டம், ஆழ்வார்திருநகரி,  திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய 7 ஊராட்சி  ஒன்றியங்களுக்குட்பட்ட 88 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், 9  மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கும், 164 ஊராட்சிக்குட்பட்ட 1281  உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடைபெறும்.

Advertising
Advertising

 2ம் கட்டமாக கோவில்பட்டி,  கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய 5 ஊராட்சி  ஒன்றியங்களைச் சேர்ந்த 86 ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும், 8 மாவட்ட  ஊராட்சி உறுப்பினர்களுக்கும், 239 ஊராட்சிக்குட்பட்ட 1662 ஊராட்சி வார்டு  உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. 2 கட்ட தேர்தலில் 17 மாவட்ட  ஊராட்சி வார்டுகளுக்கும், 174 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும், 403 ஊராட்சி  தலைவர் பதவிகளுக்கும், 2943 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3537  பதவிகளுக்கும் தேர்தல் நடத்தபடுகிறது.  இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மறுதினம் (6ம் தேதி) துவங்குகிறது. 13ம் தேதி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். 16ம்  தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற 18ம் தேதி கடைசிநாளாகும். இந்த 2  கட்டங்களில் பதிவான வாக்குகள் அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி எண்ணப்படும்.

ஜனவரி 4ம்  தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். ஊரக உள்ளாட்சி  தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து ஊரக பகுதிகளில் தேர்தல்  நன்னடத்தை விதிமுறைகள்  அமலுக்கு வந்துள்ளன.

  முதல் கட்ட தேர்தலில் 197185 ஆண்கள், 204256 பெண்கள், இதர  25 நபர்கள் என மொத்தம் 401466 வாக்காளர்களும், 2 கட்ட தேர்தலில் 197248  ஆண்கள், 203433 பெண்கள், இதர 10 நபர்கள் என மொத்தம் 400691 வாக்காளர்களும்  என மொத்தம் 394433 ஆண்கள், 407689 பெண்கள், 35 இதர நபர்கள் என மொத்தம்  802157 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்’’ என்றார்.    பேட்டியின் போது கூடுதல் கலெக்டர் (வருவாய்)  விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சப்-கலெக்டர் சிம்ரான் ஜித் சிங்  காலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மகளிர் திட்டம்  திட்ட இயக்குநர் ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக உள்ளாட்சித்  தேர்தல்) சந்திரசேகரன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

14,883 அலுவலர்கள் தயார்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 14,883 வாக்குப்பதிவு  அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் நடைபெற உள்ள 2 கட்ட  தேர்தலில் ஒரு உறுப்பினர் வார்டு 640 வாக்குச்சாவடிகளும், இரு உறுப்பினர்  வார்டு 1178 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1818 வாக்குச்சாவடிகளில் தேர்தல்  நடைபெற உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

ஆயத்த நிலையில் வாக்குபெட்டிகள்

 தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சி  தேர்தலில் ஒரு ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச்சாவடி வெள்ளை, இரண்டு  ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச்சாவடியிலும் வெள்ளை மற்றும் இளநீலம், ஆகிய  இரண்டும் ஊராட்சிமன்ற தலைவர் இளஞ்சிவப்பு, ஊராட்சி ஒன்றிய வார்டு  உறுப்பினர் பச்சை, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மஞ்சள் ஆகிய  வண்ணங்களில் வாக்குசீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது. நமது மாவட்டத்தில் ஊரக  உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான வாக்குச்சாவடி பெட்டிகள் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதி

  தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 540 வாக்குச்சாவடிகள் பதற்றமான  வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு தேர்தல் ஆணையத்தின்  அறிவுரையின்படி நுண்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை  எடுக்கப்படுகிறது. அதற்கான பட்டியல் தயார் செய்து அவர்களுக்கு தேர்தல்  ஆணையத்தின் உத்தரவுபடி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. தேர்தல் நன்னடத்தை  விதிமுறைகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில்  குடிநீர், மின்சார வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளம் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் ஆய்வு செய்து, வசதிகள் இல்லாத வாக்குச்சாவடிகளில்  ஏற்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நடைபெற உள்ள  தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்கு அளிக்க சக்கர நாற்காலி வசதி  ஏற்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories: