×

ஆவடி ஸ்ரீசங்கர் நகர், சரஸ்வதி நகரில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க 4.4 கோடியில் வடிகால் பணி தொடக்கம்

ஆவடி, டிச. 4: ஆவடி மாநகராட்சி ஸ்ரீசங்கர் நகர், சரஸ்வதி நகர், மூன்று நகர் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீசங்கர் நகர், சரஸ்வதி நகர், வசந்தம் நகர், மூன்று நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் 50ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக  மழைநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆண்டுதோறும் பருவ மழையின் போது மழைநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களிலும், வீடுகளை சுற்றி காலி இடங்களிலும் தேங்கி நிற்கின்றன. இதனால் குடியிருப்புவாசிகள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் பருவ மழையாலும், மேற்கண்ட பிரச்சனைகள் தொடர்கிறது. குறிப்பாக இந்த பகுதியில் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் நீரில் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பல்வேறு நோய் தொற்றுகளுக்கும்  ஆளாகி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வீடுகளுக்குள் படை எடுத்து செல்கின்றன.

இவைகள் கடித்து பொதுமக்களுக்கு மலேரியா உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் பரவி வருகின்றன. மேலும், தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தண்ணீரில் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதோடு மட்டுமில்லாமல், மழைநீரில் இருந்து பாம்புகள், விஷ ஜந்துக்கள் படையெடுத்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். இதனை அடுத்து, மேற்கண்ட பகுதியில் மழைநீர் செல்ல வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை தினகரன் நாளிதழில் மழைநீர் செல்ல வடிகால் அமைக்க வேண்டும் என பிரச்சனைகளை சுட்டி காட்டி புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சின்னம்மன் கோயில் தெரு, மூன்று நகர் பகுதியில் மழைநீர் வடிகால் கட்ட முடிவு செய்தது.

இதன்படி, மேற்கண்ட பகுதியில் ரூ.4.4  கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் கட்ட டெண்டர் விட்டது. இந்நிலையில், அப்பகுதியில் 2.45 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 2 மீட்டர் ஆழமும் 1.5 மீட்டர் அகலமும் அதிலும் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது.  இந்த வடிகால் பணி முழுவதுமாக முடிந்தால் வருங்காலத்தில் ஸ்ரீ சங்கரர் நகர், சரஸ்வதி நகர், மூன்று நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு இல்லை. பல ஆண்டு பிரச்னைக்கு தற்போது மாநகராட்சி அதிகாரிகள் தீர்வு  காணும் பொருட்டில் பணிகளை மேற்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிக்கு அப்பகுதி குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : rainwater harvesting ,Saraswati Nagar ,Srinagar ,
× RELATED புல்வாமாவில் என்கவுன்டர் தீவிரவாதி சுட்டு கொலை