ராக்கெட்டை ஆய்வு செய்ய வந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை மீனவர்கள் முற்றுகை

புதுச்சேரி, டிச. 4: புதுச்சேரி மீனவர்கள் வலையில் சிக்கிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஆய்வு செய்ய வந்த இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் சேதமடைந்த படகு, வலைகளுக்கான இழப்பீடு கேட்டு மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே ராக்கெட்டில் இருந்த ஒரு பகுதி மாயமாகியுள்ள நிலையில் வெடிக்கும் தன்மை கொண்ட அப்பொருளை மீட்பதற்காக அப்பகுதியில் உள்ள மீனவர்களிடம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர். புதுச்சேரி, வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த மீனவர்கள் நவீன், சிவசங்கர் உள்ளிட்ட சிலர் நேற்று முன்தினம் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். புதுச்சேரியில் இருந்து 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்தபோது அவர்களது வலையில் இரும்பிலான உருளை வடிவ மர்மபொருள் சிக்கியது.

 பின்னர் 2 படகுகளில் வந்த சக மீனவர்களின் உதவியுடன் அந்த பொருளை கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அது ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் என்பது தெரியவந்தது. வம்பாகீரப்பாளையம் கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்த மர்மபொருள் குறித்து தகவல் பரவவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மீனவர்கள் அப்பகுதியில் குவிந்தனர். இதுபற்றி ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையில் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று மீனவர்கள் இழுத்து வந்த மர்ம பொருளை பார்வையிட்டனர். முதல்கட்ட தகவலில், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயற்கைகோளை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் ராக்கெட்டில் பயன்படுத்தப்
Advertising
Advertising

படும் உந்துசக்தி மோட்டார் மற்றும் எரிபொருள் டேங்க் என்பதும் தெரியவந்தது. தற்போது அதில் எந்த எரிபொருளும் இல்லாத நிலையில், அதில் பி.எஸ்.எம்.ஓ.-எக்ஸ்.எல்-1 22.3.2019 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 13.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த எரிபொருள் டேங்க்கானது 1,600 கிலோ எடை கொண்டதோடு 12.4 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்பதும் தெரியவந்தது.

 உடனடியாக இதுபற்றி தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து விஞ்ஞானிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது இது இஸ்ரோவுக்கு சொந்தமானது, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த மார்ச் 22ம்தேதி பூமியை கண்காணிக்க RISAT2B என்ற செயற்கை கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்விசி 46 ராக்கெட் அல்லது ஏப்ரல் 1ம்தேதி எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏற்பட்ட பிஎஸ்எல்வி சி45 ராக்கெட்டில் பயன்படுத்திய பி.எஸ்.ஓ.எம். எஸ்.எல். பூஸ்டராக இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து இஸ்ரோவுக்கு அவர்கள் தகவலை பரிமாற்றம் செய்த நிலையில் அங்கிருந்து 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று புதுச்சேரி வந்தனர். அந்த பிஎஸ்எல்வி செயற்கைக் கோளின் எரிபொருள் டேங்கரை ஆய்வு செய்தனர். பின்னர் அதிலிருந்த வெடிக்கும் தன்மை கொண்ட எரிபொருள் நிரப்பிய பாகத்தை இஸ்ரோ குழுவினர் அகற்றினர். அப்போது அதில் ஒருஅடி நீளமுள்ள பகுதியை காணாமல் போயிருப்பதை கண்டுபிடித்த இஸ்ரோ குழுவினர் மீனவர்கள் எடுத்திருந்தால் ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்த அதிகாரிகள், அது வெடிக்கும் தன்மை கொண்டதால் உடனே ஒப்படைக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

 இதனிடையே இஸ்ரோ குழுவினரின் ஆய்வுக்கு வம்பாகீரப்பாளையம் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த செயற்கை கோளை கடலில் இருந்து வெளியே எடுத்துவந்தபோது மீனவர்களின் வலை, படகுகள் சேதமடைந்த நிலையில் அதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோஷமிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அன்பழகன் எம்எல்ஏவும் போராட்டத்தில் பங்கேற்று மீனவர்களுக்கு இழப்பீட்டு வழங்காமல் டேங்கரை எடுத்துச் செல்லக் கூடாது என போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பிஎஸ்எல்வி செயற்கைகோளை கிரேன் மூலம், தங்களது வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர். இதற்கு 40க்கும் மேற்பட்ட மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாகனம் முன்பு படுத்து கோஷமிட்டனர். இதையடுத்து தாசில்தார் ராஜேஷ் கண்ணா, எஸ்பிக்கள் சுபம் கோஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ மற்றும் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாவட்ட கலெக்டரை சம்பவ இடத்திற்கு வர வேண்டுமென அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் உயர்அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க போராட்டத்தை கைவிடுமாறு எம்எல்ஏ வலியுறுத்தினார். ஆனால் மீனவர்கள் தர்ணாவை தொடரவே அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார். இதனால் கிரேன் மூலம் பிஎஸ்எல்வி செயற்கைகோள் (ராக்கெட்) இஸ்ரோ குழுவினரின் வாகனத்தில் ஏற்ற முடியாமல் காத்திருந்தனர். பின்னர் அரசு தரப்பில் உயர்அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுத்ததால் மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

 இதனிடையே ராக்கெட்டில் இருந்து மாயமான வெடிக்கும் தன்மை கொண்ட பொருளை ஒப்படைக்குமாறு ஒலிபெருக்கி வாயிலாக மீனவர்களுக்கு அறிவிப்பு செய்த ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் தலைமையிலான போலீசார், அப்பகுதி மீனவர்களிடம் அதிரடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.ராக்கெட்டை பார்வையிட்டஅறிவியல் ஆசிரியர்கள்புதுச்சேரி கடலில் கிடந்து மீனவர்களால் கரைக்கு கொண்டு வரப்பட்ட பிஎஸ்எல்வி பூஸ்டர் ராக்கெட் வம்பாகீரப்பாளையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்து அவற்றை எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டனர்.இதனிடையே பிஎஸ்எல்வி ராக்கெட் புதுவையில் கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்த அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் அறிவியல் ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் அங்கு வந்து அதனை பார்வையிட்டு சென்றனர். அப்போது அங்கிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ராக்கெட் தயாரிப்பு பணிகள் குறித்த விவரங்களை அவர்கள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.

Related Stories: