×

முஷ்ணம் அருகே பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம்

முஷ்ணம், டிச. 4: முஷ்ணம் அருகே விடிய விடிய பெய்த பலத்த மழையால் நேற்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி விட்டன. தொடர் மழையால் பல இடங்களில் வீடு இடிந்து விழுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் கம்மியம்பேட்டையில் கடந்த 28ம் தேதி நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். இதேபோல் பல இடங்களில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே முஷ்ணம் அருகே குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்.

இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஜெயராமன் (55), அவரது மனைவி பானுமதி (43), மகள் சிவரஞ்சனி (24), மகன் ஏழுமலை (15) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் முஷ்ணம் காவல்நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் வருவதற்கு முன்பே படுகாயம் அடைந்த 4 பேரையும் அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து தகவலறிந்த முஷ்ணம் வட்டாட்சியர் புகழேந்தி, வருவாய் ஆய்வாளர் கோவிந்தன் ஆகியோர் மழையால் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் ெஜயராமன் உள்ளிட்ட 4 பேரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பலத்த மழையால் வீட்டுச்சுவர் இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது