×

சேத்தியாத்தோப்பு பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் பொதுமக்கள் கடும் பாதிப்பு

சேத்தியாத்தோப்பு, டிச. 4: சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு சென்னிநத்தம் கிராமத்தில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு சென்னிநத்தம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு காளியம்மன் கோயில் அருகே உள்ள பகுதியை சுற்றிலும் வடிகால் வசதியில்லாததால் தற்போது பெய்த கனமழையின் காரணமாக கிருஷ்ணசாமி மனைவி அம்சாயாள் (75), ராமானுஜம் மனைவி சாரதாம்பாள் (80), கிருஷ்ணசாமி மகன் சுப்பிரமணியன் (60) உள்பட இங்குள்ள அனைவரின் கூரை வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மாடி வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 3 நாட்களாக பெய்த கனமழையில் எங்களது வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் இருந்த துணிமணி, உடமைகளை எடுக்க முடியாமல் அருகே உள்ள மாடி வீடுகளில் தஞ்சமடைந்துள்ளோம். சமைத்து சாப்பிட முடியாமலும், நிம்மதியான தூக்கம் இல்லாமலும் அவதியடைந்து வருகின்றோம். இதுவரை பேரூராட்சி செயல் அலுவலரோ, வருவாய் துறையினரோ எங்களை வந்து பார்க்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் குடியிருப்பை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : public ,area ,Sethiyathope ,houses ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...