×

போக்குவரத்துக்கழக ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.27,710 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

நாகர்கோவில், டிச.4 : ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கான பண பலன்களை வழங்க கோரி, நெல்லையில் உள்ள போக்குவரத்து கழக கோட்ட அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட போவதாக அறிவித்து உள்ளனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நாகர்கோவில் மண்டல ஆலோசனை கூட்டம், நாகர்கோவிலில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தன் தலைமை வகித்தார். செயலாளர் பிரான்சிஸ் செல்வராஜ் வரவேற்றார். கோவை மண்டல பொருளாளர் சந்திரசேகர், சென்னையை சேர்ந்த சிங்காரம் மற்றும் நாகர்கோவில் மண்டல ஒருங்கிணைப்பாளர் அய்யாத்துரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சுமார் 85 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த 2019  ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு எந்த  பண பலன்களும் வழங்கப்பட வில்லை. ஜனவரி 2016 ல் இருந்து அகவிலைப்படி உயர்வு இல்லை. ஊதிய ஒப்பந்த சரத்துப்படி 2003 ல் இருந்து பென்சன் உயர்வு கிடையாது. பணியின் போது சரண்டர் செய்த விடுப்புக்கான பணம் போன்ற எந்த பண பலன்களும் இல்லை.

கடந்த செப்டம்பர் மாதம் 24ம்தேதி சென்னையில் நடந்த முற்றுகை போராட்டத்தின் போது, 45 நாட்களுக்குள் அகவிலைப்படி உயர்வுக்கான கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. 60 நாட்கள் ஆகியும் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்து, போக்குவரத்து கழகம் செலவு செய்த தொகை ரூ.22,710 கோடி பணத்தை உடனடியாக அரசு திரும்ப வழங்க வேண்டும். அந்த பணத்தை பென்சன் டிரஸ்ட்டுக்கு வழங்கினால், ஓய்வு ெபற்ற  போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான பண பலன்களை வழங்க உதவியாக இருக்கும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாதம் 2 வது வாரத்தில், நெல்லையில் உள்ள அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் நெல்லையில் உள்ள ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களும் கலந்து கொள்வார்கள் என இந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறினர். பொருளாளர் சைமன் நன்றி கூறினார். ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : government ,Government of Tamil Nadu ,Rs ,
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...