×

குமரி மாவட்டத்தில் பூச்சி தாக்குதலால் நாட்டு கத்தரிக்காய் மகசூல் குறைவு

நாகர்கோவில், டிச. 4: குமரி மாவட்டத்தில் கார்த்திகை மாதத்தில் விவசாய பயிர்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனால் பயிர்களில் விளையும் காய்களின் மகசூல் குறைவாக இருந்து வருகிறது. தற்போது சபரிமலை சீசன் காரணமாக காய்கறிகளின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி குறைவால் விலை உயர்ந்து காணப்படுகிறது. கத்தரிக்காய் செடியில் தற்போது பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதால் மகசூல் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. மண்டைக்காடு பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி புத்தேரி பகுதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நாட்டு கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளார். அங்கு பூச்சி தாக்குதலால் மகசூல் குறைந்துள்ளது. இதனால் அவர் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளார். இது குறித்து அந்த விவசாயி கூறியதாவது: 4 ஏக்கர் பரப்பளவில் நாட்டுகத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளேன். கத்தரிக்காய் செடியில் தற்போது பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் மகசூல் குறைந்துள்ளது.  4 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருக்கும் கத்தரிக்காய் செடியில் வாரத்திற்கு சுமார் 60 மூடை கத்தரிக்காய் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது 10 மூடை மட்டுமே கத்தரிக்காய் கிடைக்கிறது.

ஒரு மூடை மார்க்கெட்டில் ரூ.1000க்கு விலை போகிறது. இதில் கத்திரிக்காயை கட்டப் பயன்படுத்தப்படும் சாக்குமூடை ரூ.110 விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அது போல் மார்க்கெட்டில் உள்ள இடைதரகருக்கு ரூ.100 கொடுக்க வேண்டியுள்ளது. இவை போக மீதம் ரூ.790 மட்டுமே கிடைக்கிறது.  இதில் கத்தரிக்காய் பறிக்க வரும் தொழிலாளிகளுக்கு கூலி கொடுத்த பிறகு குறைந்த அளவே பணம் கிடைகிறது.  பூச்சி தாக்குதலால் பூச்சி மருந்து அடிக்கவே மாதத்திற்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. செலவு செய்த தொகைக்கு கத்தரிக்காய் கிடைக்கவில்லை.  மொத்தத்தில் தொடர்ந்து நஷ்டத்தைதான் சந்திக்க வேண்டியுள்ளது என்றார்.

Tags : district ,pest attack ,Kumari ,
× RELATED குமரி மாவட்டத்தில் அதிவேக டாரஸ் லாரிகளால் தொடரும் விபத்துக்கள்