×

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் தோட்ட தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் திடீர் குறைப்பு

நாகர்கோவில், டிச.4:  அரசு ரப்பர் தோட்ட தற்காலிக பணியாளர்களுக்கான சம்பளம் திடீரென குறைக்கப்பட்டு இருப்பது, தொழிலாளர்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தின் கீழ் கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மயிலார், சிற்றார், குற்றியாறு, மருதம்பாறை, கல்லாறு ஆகிய இடங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 430 ஹெக்டர் பரப்பளவில் அரசு ரப்பர் தோட்டம் உள்ளது. மொத்தம் 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் பால் வடிப்பு, களை வெட்டுதல் உள்ளிட்ட பணியில் நிரந்தர பணியாளர்களாக 942 பேரும், 342 பேர் தற்காலிக ஊழியர்களும் உள்ளனர். தினமும் சராசரியாக 18 ஆயிரம் டன் முதல் 19 ஆயிரம் டன் வரை பால் வடித்து கொடுக்கின்றனர். நிரந்தர பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் சம்பளமான ரூ.468 தான், தற்காலிக பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 2000ம் ஆண்டில் இருந்தே, தற்காலிக பணியாளர்கள் பணியில் உள்ளனர். இந்த நிலையில் தற்காலிக பணியாளர்களுக்கான சம்பளத்தை அரசு ரப்பர் கழக நிர்வாகம், திடீரென ரூ.418 ஆக குறைத்துள்ளது.  நவம்பர் மாதத்தில் இருந்து இந்த சம்பள குறைப்பு அமுலுக்கு வந்து இருப்பதாகவும், அரசு ரப்பர் கழகம் தெரிவித்து உள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தொழிலாளர்கள், அதிகாரிகளிடம் கேட்ட போது கலெக்டர் உத்தரவின் பேரில் சம்பளம் குறைக்கப்பட்டு உள்ளதாக கூறி இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சம்பளத்தை திடீரென குறைத்து இருப்பதால், தொழிலாளர்கள் செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை கீரிப்பாறையில் தற்காலிக தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் சோனியா, ராகுல் பொது தொழிலாளர்கள் சங்க பொது செயலாளர் குமரன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த சம்பள குறைப்பை கண்டித்து வருகிற 10ம் தேதி கீரிப்பாறையில் உள்ள கோட்ட மேலாளர் அலுவலகம் முன் முற்றுைக போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்க வருமாறு குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்து கோரிக்கை வைக்க போவதாகவும் தொழிலாளர்கள் கூறினர். ஏற்கனவே அரசு ரப்பர் தோட்ட நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டுக்கான சம்பள பேச்சு வார்த்தையே இன்னும் முடிவடையாமல் உள்ள நிலையில், தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : reduction ,state rubber plantation ,district ,Kumari ,
× RELATED காஸ் விலை குறைப்பு நாடகம்: இவரே குண்டு...