×

திருவண்ணாமலை அருகே நள்ளிரவில் வீடுபுகுந்தனர் தூங்கிய விவசாயி சரமாரி வெட்டிக்கொலை போலீசார் விசாரணை

திருவண்ணாமலை, டிச.4: திருவண்ணாமலை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயி, நள்ளிரவில் மர்ம ஆசாமிகளால் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(65), விவசாயி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் பிரேம்குமார்(26). மகள் லாவண்யா திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கணேசனும், மகேஸ்வரியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.மகேஸ்வரி திருவண்ணாமலையில் தனது மகன் பிரேம்குமாருடன் தங்கி, தானிப்பாடியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் பணிபுரிந்து வருகிறார். கணேசன் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் இருந்து கணேசனின் அலறல் சத்தம் கேட்டது. அதை கேட்டு அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்களில் சிலர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது கணேசன், கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் சரமாரியான வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் மர்ம ஆசாமிகள் நள்ளிரவு வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த விவசாயி கணேசனை சரமாரி வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.பின்னர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து கணேசன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுதவிர, கணேசனின் மனைவி மகேஸ்வரி மற்றும் கணேசனுக்கு தொடர்புள்ளதாக கூறப்படும், அதே கிராமத்தை சேர்ந்த சத்தியவாணி என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி நள்ளிரவில் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : death ,Thiruvannamalai ,
× RELATED சங்கராபுரம் அருகே மணிமுக்தாற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி