பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் படுகொலை வழக்கு விடுதலையான 13 ஆயுள் தண்டனை கைதிகள் ஐகோர்ட் உத்தரவுபடி வேலூரில் தங்கினர் 8ம் தேதி எஸ்பி முன் ஆஜர்

வேலூர், டிச.4: பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் படுகொலையில் விடுதலையான 13 பேரும், ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில் வேலூரில் தங்கி உள்ளனர். இவர்கள் வரும் 8ம் தேதி எஸ்பி முன்னிலையில் ஆஜராக உள்ளனர்.மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் முருகேசன். இவர் உள்பட 7 பேர் கடந்த 1996ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பிறந்த நாளையொட்டி அவர்களில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.பின்னர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மீதமுள்ள 13 பேரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலையை எதிரத்து வக்கீல் ரத்தினம், ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், விடுதலையான 13 பேரும் மேலவளவு கிராமத்திற்குள் நுழையக்கூடாது. வேலூரில் தங்கி இருக்க வேண்டும். 1வது மற்றும் 3வது ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர் எஸ்பி முன்னிலையில் ஆஜராக வேண்டும். 2வது மற்றும் 4வது ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த மாவட்டத்தின் நன்னடத்தை அலுவலர் முன்பு ஆஜராக வேண்டும்.

இந்த 13 பேரும் செல்போன் எண்களை மாற்றக்கூடாது. வேறெங்கும் அவசரமாக வெளியில் செல்லும் நிலை இருந்தால் உரிய அனுமதியை நீதிமன்றத்தில் பெற வேண்டும். வேலூரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவு வழங்கினர்.இதையடுத்து, ராமன், சேகர், மணிகண்டன் ஆகிய 3 பேரும் காட்பாடியிலும், செல்வம், சின்னஒடுங்கன், மனோகரன், அழகு, சொக்கநாதன், பொன்னையா, ராஜேந்திரன், ரங்கநாதன், சக்கரமூர்த்தி, ஆண்டியப்ப சாமி ஆகிய 10 பேரும் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் நேற்று முன்தினம் முதல் வேலூரில் தங்கியுள்ளனர்.ஐகோர்ட் உத்தரவுபடி வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலூர் எஸ்பி பிரவேஷ்குமார் முன்பு 13 பேரும் ஆஜராக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: