பாதாள சாக்கடை பணியால் சேறும் சகதியுமான சாலைகள் ஜேசிபியை சிறைபிடித்த பொதுமக்கள் ஆம்பூரில் பரபரப்பு- போலீசார் சமரசம்

ஆம்பூர், டிச.4: ஆம்பூரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியால் சேறும், சகதியுமான சாலைகளாக இருப்பதை கண்டித்து நேற்று பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக குடிநீர் வினியோகத்திற்கான பைப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. மேலும் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளில் மண் குவிந்து சேறும், சகதியுமாக மாறி உள்ளது.தற்போது ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த சகதி நிறைந்த சாலையை சீரமைத்து தர பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், பல இடங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், முதியவர்கள், பெண்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட பலர் சகதியில் வழுக்கி விழுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஆம்பூர் சாமியார் மடம் சாலையில் சகதியில் வாகனங்கள் சிக்கியதில் சிலர் காயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியினர் உடன் அங்கு பாதாள சாக்கடைக்கான குழி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேலும், அப்பகுதியில் உள்ள நாகாலமம்மன் கோயில் திருவிழா நடக்க உள்ள நிலையில் ஆம்பூர் நகராட்சி சார்பாக கழிவுநீர் கால்வாய் அமைத்தல், பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் பைப்லைன் அமைத்தல், குடிநீர் வினியோகத்திற்கான பைப்லைன் என பல்வேறு பணிகள் காரணமாக சாலைகள் சகதியாக மாறி நடப்பதற்கு கூட லாயக்கற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.தகவலறிந்த ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி கோயில் திருவிழா முடியும் வரையில் அப்பகுதியில் பாதாள சாக்கடை பணி நடத்தாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினர். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: