கலெக்டர் தகவல் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக 4 பெண்களிடம் 8 பவுன் நகைகளை வாங்கி சென்ற தம்பதி தலைமறைவு போலீசார் விசாரணை

பாடாலூர், டிச. 3: பாடாலூரில் உறவினர் வீட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வருவதாக கூறி 4 பெண்களிடம் 8 பவுன் நகைகளை நூதன முறையில் வாங்கி சென்ற தம்பதி தலைமறைவாகினர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே வாடகை வீட்டில் வெளியூரை சேர்ந்த முனியாண்டி, அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர் குடியிருந்து வந்தனர். முனியாண்டி அதே பகுதியில் உள்ள ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 29ம் தேதி உறவினர் வீட்டில் நடைபெறும் திருமணத்துக்கு செல்வதாகவும், அவர்கள் வசதியானவர்கள் என்பதால் நகைகள் போட்டு செல்ல வேண்டும். எனவே திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வந்து நகைகள் கொடுத்து விடுகிறேன் எனக் கூறி அரசமர தெருவை சேர்ந்த நடேசன் மனைவி சரோஜாவிடம் 3 பவுன் செயின் வாங்கினர்.

மேலும் எல்லையம்மன் நகர் பகுதியை சேர்ந்த நவீன் மனைவி சுமதியிடம் 2 பவுன் செயின், கற்பகவிநாயகர் நகரை சேர்ந்த சுப்பிரமணி மனைவி விஜயாவிடம் ஒரு பவுன் தோடு, கருணாகரன் மனைவி மாகலட்சுமியிடம் 2 பவுன் செயின் என 4 பெண்களிடம் 8 பவுன் நகையை வாங்கி சென்றனர். ஆனால் அதன்பின் இருவரும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நகைகளை கொடுத்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். இதையடுத்து பாடாலூர் காவல் நிலையத்தில் 4 பேரும் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கவரிங் நகையால் கடுப்பு பெண்ணுக்கு கத்திகுத்து