×

அரியலூர் மாவட்டத்தில் தினமும் 66,000 லிட்டர் பால் கொள்முதல்

அரியலூர், டிச. 3: அரியலூர் மாவட்டத்தில் நாளொன்று 66,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்று பால் குளிரூட்டும் மையம் திறப்பு விழாவில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பேசினார். அரியலூர் மாவட்டம் கீழப்பழுரில் ரூ.15 லட்சம் மதிப்பில் தொகுப்பு பால் குளிரூட்டும் மையம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பால் குளிரூட்டும் மையத்தை திறந்து வைத்து அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பேசுகையில், தமிழக முதலமைச்சரின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் மூலம் தமிழகத்தில் அதிக பால் உற்பத்தி பெருகியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 97 பால் உற்த்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 66,000 லிட்டர் பால் ஒன்றியத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் தற்போது செந்துறை, இடைக்கட்டு, ஜெயங்கொண்டம், விளாங்குடி கைகாட்டி, கீழப்பழூர் ஆகிய 5 இடங்களில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நேரடியாக சென்னை இணையத்துக்கு அனுப்பப்பட்டுவருகிறது.

கீழபழூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இடத்தில் தேசிய பால்வள திட்டத்தின்கீழ் புதிய கூடுதல் 5000 லிட்டர் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம் ரூ.15 லட்சம் மதிப்பில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2,114 உறுப்பினர்களுக்கு ரூ.12.87 லட்சம் மதிப்பில் ஊக்கத்தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். துணைத்தலைவர் தங்க.பிச்சமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆவின் திருச்சி பொது மேலாளர் சுமன், கீழப்பழூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur district ,
× RELATED அரசு கொள்முதல் மையத்தில் உடனடியாக...