அங்கன்வாடிகளில் குழந்தைகள் உணவு உண்ணும் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்ப உத்தரவு

வேலூர், டிச.3: தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் உணவு உண்பதை படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்ப உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களின் மூலம் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவகல்வி வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தினமும் தக்காளி சாதம், கலவை சாதம், பருப்பு சாதம் மற்றும் வேக வைத்த முட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சத்துமாவும் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் சரியாக கிடைப்பதில்லை என்று பெற்றோர் குற்றம்சாட்டி வந்தனர். எனவே குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், குழந்தைகள் உணவு உண்ணுவதை போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், குழந்தைகள் உணவு சாப்பிடும் போது புகைப்படம் எடுத்து, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முட்டை மற்றும் உணவு முழுமையாக குழந்தைகள் சாப்பிடுவதை உறுதி செய்ய முடியும். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த ஒரு மாத்திற்கு மேலாக குழந்தைகள் உணவு உண்ணும்போது படமெடுத்து அனுப்பி வருகின்றனர். இதில் சுணக்கம் காட்டும் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: