வேலூர் சத்துவாச்சாரியில் டாக்டர் வீட்டில் 5 சவரன் நகைகள், ₹69 ஆயிரம் திருட்டு

வேலூர், டிச.3: வேலூர் சத்துவாச்சாரியில் தனியார் மருத்துவமனை டாக்டர் வீட்டில் புகுந்த மர்ம கும்பல் 5 சவரன் நகைகள் மற்றும் ₹69 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரி கோர்ட் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்(40). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சஞ்சீவ் கடந்த மாதம் 27ம் தேதி தன் சொந்த வேலையாக வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, உள்அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் உள்ளே புகுந்த மர்ம கும்பல் பீரோ லாக்கரை உடைத்து அதிலிருந்த 5 சவரன் நகை மற்றும் ₹69 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், போலீஸ் விசாரணையில் வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்த மர்ம கும்பல் வீட்டின் உள்ளே நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து சஞ்சீவ் வேலூர் சத்துவாச்சாரி போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories:

>