×

வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு உதவும் கறுப்பு ஆடுகளின் பட்டியல் சேகரிப்பு

வேலூர், டிச.3: வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு உதவும் கறுப்பு ஆடுகள் யார் ? என்பது குறித்து பட்டியலை சிறை நிர்வாகம் சேகரித்து வரும் சம்பவம் காவலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அடைப்பதற்காக உயர்பாதுகாப்பு தொகுதி, கோபுர தொகுதி, புது கட்டிடம், ஓ.எப் தொகுதி(ஓல்டு பீமேல்), தனிதொகுதிகள் என 5 வகையான கட்டிடங்கள் உள்ளன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறையில் உள்ள கைதிகளிடம் செல்போன் புழக்கம் அதிகமாக இருந்தது. இதனால் சிறைக்குள் இருந்த ரவுடிகள், தங்கள் கூட்டாளிகளுக்கு சிறையில் இருந்து திட்டம் போட்டு கொடுத்து, கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வந்தனர். கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் வேலூர் மத்திய சிறையில் ஜாமர் கருவி பயன்பாட்டிற்கு வந்தது. அதன்பிறகும் செல்போன் பயன்பாடு குறையவில்லை. சிறைத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து செல்போன்களை பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் மட்டும் 3க்கும் மேற்பட்ட செல்போன், 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சிறைக்குள் செல்போன், சிம்கார்டு, மெமரி கார்டுகள் ஆங்காங்கே புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறை போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகே கைதிகள் மற்றும் அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் சிறைக்குள் செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் எப்படி கிடைக்கிறது என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு புரியாத புதிராக உள்ளது. இதற்கிடையில், கைதிகளுக்கு ஒரு சில காவலர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு உதவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கைதிகளுக்கு உதவும் காவலர்களை ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் கைதிகளுக்கு உதவுவது தெரியவந்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : inmates ,Vellore Central Prison ,
× RELATED சிறையில் இட்லி சாப்பிட்ட 13 கைதிகளுக்கு வயிற்று வலி