சாலையில் கிடந்த பணப்பையை எடுத்து சென்ற விவகாரம் துப்பாக்கி முனையில் கட்டிட மேஸ்திரி காரில் கடத்தி கொலை

* மனைவி, மகன் கண்முன்னே பயங்கரம் * சென்னையை சேர்ந்த 10 பேர் கைது

ஆற்காடு, டிச. 1: சாலையில் கிடந்த பணப்பையை எடுத்து சென்றதாக கட்டிட மேஸ்திரி மற்றும் அவரது மனைவி, மகனை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பல் அவர்கள் கண்முன்னே கட்டிட மேஸ்திரியை அடித்து கொலை செய்து, ஆற்காடு அருகே சடலத்தை வீசிசென்றது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள தட்டச்சேரி மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன்(50), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி தேவகி. இவர்களது மகன் கிருஷ்ணன்(25). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் தனது குடும்பத்துடன் ஒப்பந்ததாரர் மூலம் சென்னை தாம்பரம் மூகாம்பிகை நகரில் தங்கி கட்டி வேலை செய்து வந்தார். மேலும், அவரது மனைவி தேவகி கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முருகன் வேலைக்கு செல்லாமல் தினமும் தாம்பரம் லட்சுமிபுரத்தில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்து விட்டு வருவது வழக்கம். அப்போது, தினமும் தாராளமாக பணம் செலவு செய்து அங்கிருந்த பார் ஊழியர் முனியாண்டிக்கு டிப்சும் வழங்கி வந்தாராம். இதனால், சந்தேகமடைந்த முனியாண்டி கடந்த 22ம் தேதி போதையில் இருந்த முருகனிடம் நைசாக பேச்சு கொடுத்து இவ்வளவு பணம் உன்னிடம் எப்படி வந்தது என விசாரித்தார். அதற்கு, முருகன், தீபாவளியன்று மதுகுடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் போது, சாலை ஓரத்தில் கருப்பு நிற பை ஒன்று இருந்தது. அதில் கட்டு கட்டாக பணம் இருந்தாக தெரிவித்தார்.

இதைக்கேட்ட முனியாண்டி இதுகுறித்து முடிச்சூரை சேர்ந்த நண்பன் அருண்பாண்டியன்(32) என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் முருகனை தேடி அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு முருகன் இல்லாததால் அவரது மகன் கிருஷ்ணனிடம் உங்கள் தந்தை கொண்டுவந்த கருப்பு நிற பையை தரும்படி கேட்டனர். அதற்கு கிருஷ்ணன் தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறியுள்ளார். உனது தந்தை வந்தவுடன் பணப்பையை வாங்கி வை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். பணப்பை குறித்து முருகன் வீட்டிற்கு வந்த பிறகு கிருஷ்ணனும், தேவகியும் கேட்டனர். இதையடுத்து, முருகன் இரவோடு இரவாக வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ராந்தத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

மறுநாள் அருண்பாண்டியன் வந்து பார்த்தபோது, வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் முருகனின் செல்போன் நம்பரை கேட்டு பெற்று போன் செய்தபோது சுவிட்ச்ஆப் என வந்தது. இருப்பினும் செல்போன் சிக்னலை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த அருண்பாண்டியன் கடந்த 23ம் தேதி காரில் தனது நண்பர்களுடன் ராந்தம் சென்றார். அங்கிருந்த முருகன், தேவகி, கிருஷ்ணன் ஆகியோரை துப்பாக்கி முனையில் காரில் பள்ளிக்கரணைக்கு கடத்திச்சென்று பணப்பையை தரும்படி கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது முருகன் ‘எனது வீட்டின் எதிரே உள்ள காலி மனையில் பணப்பையை புதைத்து வைத்துள்ளேன்' என தெரிவித்தாராம்.

அதன்பேரில் அருண்பாண்டியன் காலிமனைக்கு சென்று தோண்டிப்பார்த்தார். ஆனால் அங்கு பை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 24ம் தேதி பள்ளிக்கரணை பெரிய கோவிலம்பாக்கம் அருகில் ஒரு ஷெட்டில் வைத்து முருகன், தேவகி, கிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனையடுத்து, கடந்த 25ம் தேதி காரில் முருகன் சடலத்தையும், கிருஷ்ணன், தேவகி ஆகியோரையும் ஏற்றிக்கொண்டு கலவை அருகே தட்டச்சேரியில் உள்ள அவர்களது வீட்டில் இறக்கிவிட்டு, முருகன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறும்படியும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் உங்களையும் கொன்று விடுவோம் என மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

ஆனால், பணப்பை தேவகியிடம் இருந்ததால், போலீசில் புகார் தெரிவித்தால் பணப்பை விஷயம் தெரிந்துவிடும் என்பதால் யாரிடமும் சொல்லாமல் முருகன் சடலத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் சிலர் கடந்த 26ம் தேதி காலை வாழப்பந்தல் போலீசுக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தேவகி, கிருஷ்ணன் ஆகியோரிடம் துருவி துருவி விசாரித்தனர். அதில், கருப்பு நிற பையில் இருந்த பணம் தொடர்பாக முருகன் அடித்து கொலை செய்யப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் முருகன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடந்த 27ம் தேதி கிருஷ்ணனிடம் புகாரை பெற்று வழக்குப்பதிந்து விசாணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக சென்னை முடிச்சூர் மற்றும் பள்ளிக்கரணையை சேர்ந்த அருண்பாண்டியன், எழில், சேகர், முனியாண்டி, விக்னேஷ், கந்தன், ஜானகிராமன், குமார், புருஷோத்தமன், பாரதி ஆகிய 10 பேரை நேற்று அதிகாலை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 கார்களை பறிமுதல் செய்தனர். கருப்பு நிற பையில் பணம் எவ்வளவு இருந்தது என்பது குறித்து தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: