புவனகிரி பகுதியில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்

புவனகிரி, நவ. 29: புவனகிரி நகரில் உள்ள தாமரை குளத்தெரு பகுதியில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாற்று நடும் போராட்டம் நடத்த திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் புவனகிரி நகரில் உள்ள 6வது வார்டுக்கு உட்பட்ட தாமரை குள வடகரை, தென்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் சரியாக இல்லை. இங்கிருந்த சாலைகள் குண்டும், குழியுமாக மாறி செம்மண் சாலை போல மாறிவிட்டது. இதனால் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் சேறு நிறைந்த சாலையில் வழுக்கி கீழே விழுந்து விடுகின்றனர். இவ்வாறு கீழே விழும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதுகுறித்து இந்த பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இதை கண்டித்தும், சாலையை விரைந்து சீரமைக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களுடன் இணைந்து தாமரைக்குள தெருவில் சாலையில் ஏர் ஓட்டி நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று போராட்டம் நடந்தது. கட்சியின் நிர்வாகி கதிர்வேல் தலைமை தாங்கினார். கணேசன், கதிரேசன், முருகன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், புவனகிரி ஒன்றிய செயலாளர் சதானந்தம், நகர செயலாளர் மணவாளன், ஒன்றிய விவசாய சங்க தலைவர் வெற்றிவேல் மற்றும் பொதுமக்கள் பலர் போராட்டம் நடத்த ஒன்று திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி (பொறுப்பு) மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் போராட்டம் நடத்த வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் சாலை புதிதாக போடப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: