நிர்வாக அதிகாரியை கண்டித்து கோட்ட அலுவலகத்தில் மாநகராட்சி பெண் ஊழியர் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி, நவ.22: நிர்வாக அதிகாரியை கண்டித்து கோட்ட அலுவலகத்தில் மாநகராட்சி பெண் ஊழியர் நடத்திய 3 மணி நேர உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சி ரங்கம் கோட்ட அலுவலகத்தில் ஜெயலெட்சுமி(54), ரெக்கார்டு கிளார்க்காக பணியாற்றி வருகிறார். இவர் பிறப்பு இறப்பு சான்றுகள் மற்றும் குடிநீர் இணைப்பு போன்றவைக்கான விண்ணப்பங்களை விற்பனை செய்யும் பணியை செய்து வருகிறார். விண்ணப்பங்கள் விற்ற பணத்திற்கான கணக்குகளை பதிவேட்டில் எழுதி சூப்ரெண்ட் மற்றும் நிர்வாக அதிகாரி ரமேஷ்குமாரிடம் கையெழுத்து பெற்று பணத்தை அங்குள்ள கருவூலத்தில் கட்டுவது வழக்கம்.

இந்நிலையில் ஜெயலெட்சுமியின் மகன் நிர்வாக அதிகாரி மீது புகார் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று ஜெயலெட்சுமிக்கும், நிர்வாக அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயலெட்சுமி பணத்தை கருவூலத்தில் கட்டுவதற்காக பதிவேட்டில் கையெழுத்து வாங்க நிர்வாக அதிகாரியிடம் சென்றுள்ளார். அவர் உதவி ஆணையரிடம் கையெழுத்து பெற்று பணத்தை கருவூலத்தில் கட்ட சொல்லிவிட்டு வேண்டுமென்றே கையெழுத்து போடாமல் அலுவலக வேலை என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இந்நிலையில் உதவி ஆணையரும் அலுவலகத்தில் இல்லை. ஜெயலெட்சுமியால் பதிவேட்டில் கையெழுத்து பெறமுடியவில்லை. பணமும் கட்டமுடியவில்லை. இதனால் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் செய்வறியாது தவித்தார்.வேண்டுமென்றே பழிவாங்குவதாக நினைத்த ஜெயலெட்சுமி நிர்வாக அதிகாரி ரமேஷ்குமாரை கண்டித்து மாலை 6 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் இரவு 8.30 வரை நீடித்தது.

தகவலறிந்து அங்கு வந்த ரங்கம் சப்இன்ஸ்பெக்டர் கோபிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்த உதவி ஆணையர் வைத்தியநாதன் போன் மூலம் ஜெயலெட்சுமியிடம் பணத்தை அலுவகத்திலேயே வைத்து பூட்டிவிட்டு செல்லுமாறு கூறினார்.

மேலும் ரமேஷ்குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ஜெயலெட்சுமி பணத்தை அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு சென்றார். இதனால் ரங்கம் கோட்ட அலுவலகத்தில் சுமார் 3 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>