பொதுமக்கள், குடும்பநலனில் சேவையாற்றும் பெண் போலீசார் உடல் நலத்திலும் அக்கறை செலுத்தணும்

திருச்சி, நவ. 22: பொதுமக்கள், குடும்ப நலனில் சேவையாற்றும் பெண் போலீசார் தங்களது உடல் நலத்திலும் தனி அக்கறை செலுத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறினார். திருச்சி மாநகர பெண் போலீசாரின் உடல்நலம், மனநலம் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. மாநகர குற்றப்பதிவேடுகள் கூடம் இன்ஸ்பெக்டர் சித்ரா வரவேற்றார். துணை கமிஷனர் நிஷா வாழ்த்துரையாற்றினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேசியதாவது:

காவல் பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்கள் பொதுமக்கள் மற்றும் தங்களது குடும்பத்தையும் கவனித்து சிறந்த சேவையாற்றி வருகின்றனர். ஆனால் தங்களது நலனில் அக்கறை கொள்வதில்லை. எனவே தங்களது நலனிலும் தனி அக்கறை செலுத்த வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து உறையூர் ராமகிருஷ்ணா மருத்துவமனை மகளிர் டாக்டர் ரமணிதேவி பெண்களின் உடல்நலம் குறித்து விளக்கவுரையாற்றினார். உளவியல் நிபுணர் டாக்டர் கீதா பெண்களின் மனநலம் குறித்து விளக்கினார். கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவல்லி நன்றி கூறினார்.  இதில் ஏராளமான பெண் போலீசார் கலந்துகொண்டனர்.

Related Stories:

>