திருச்சியில் மூதாட்டியை தாக்கி நகை, பணம், காரை திருடிய 2 வாலிபர் சிக்கினர்

திருச்சி, நவ.22: திருச்சி கே.கே.நகர் முருகவேல் நகரை சேர்ந்தவர் பெரியசாமி(74). பெல் அருகே துவாக்குடியில் தொழிற்சாலை வைத்துள்ளார்.

இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அனைவரும் வெளியூர்களில் இருப்பதால் தம்பதி தனியாக வசித்து வருகின்றனர். பெரியசாமி தினமும் வேலைக்கு செல்லும்போது, பாதுகாப்பு கருதி மனைவியை வீட்டுக்குள் வைத்து பூட்டி செல்வார். அதுபோல் கடந்த ஆக.29ம் தேதி மெயின் கதவு மற்றும் வீட்டின் முன்பக்க கேட்டை பூட்டி சென்றார். இதையடுத்து மதியம் 2 மணியளவில் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மூகமூடி கொள்ளையர்கள், மெயின் கதவை நெம்பி திறந்து உள்ளே சென்றனர். அப்போது ஒரு அறையில் இருந்த சரஸ்வதி, கணவர் வந்து விட்டார் என கருதி அறை கதவை திறந்தார். இதனை பார்த்த கொள்ளையர்கள், வீட்டில் யாரும் இல்லை என்பதால் கதவை உடைத்து உள்ளே புகுந்தோம், தற்போது அறையில் மூதாட்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, சரஸ்வதியின் இரு காதுகளிலும் ஓங்கி அடித்தனர். இதில் கிறுகிறுத்து போன சரஸ்வதியை சேரில் அமர வைத்து அவர் அணிந்து தோடு, வளையல் உள்ளிட்ட 7 பவுன் நகைகளை பறித்தனர்.

தொடர்ந்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சம், வெளியில் நிறுத்தியிருந்த சொகுசு காரின் சாவியை எடுத்து காருடன் அங்கிருந்து தப்பினர். இது பற்றி கணவருக்கு தகவல் கொடுத்து வரவழைத்த சரஸ்வதி இது குறித்து கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் சொகுசு காரில் வந்த 4 கொள்ளையர்களில் 2 பேர் காரில் இருந்தபடி யாரும் வருகிறார்களா என கண்காணித்துள்ளனர். மற்ற 2 பேர் வீட்டின் உள்ளே புகுந்து திருடி சென்றனர். பணம், நகைகளை திருடிய கொள்ளையர்கள் காரையும் எடுத்து கொண்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து மாநகர கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனி்ப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பூண்டி வினோத்(32), தினேஷ்(28) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பூட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு வீட்டு முன் நிற்கும் கார்களையும் எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். போலீசாருக்கு தெரிந்தால் காரை வழியிலேயே விட்டுவிட்டு தப்பிவிடுவது தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் நகையை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவர்களது நண்பர்கள் 2 பேரை தேடி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.

Related Stories: